உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வீட்டு உபயோக ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் பிரதமர், முதல்வருக்கு ஏற்றுமதியாளர் சங்கம் மனு

வீட்டு உபயோக ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் பிரதமர், முதல்வருக்கு ஏற்றுமதியாளர் சங்கம் மனு

கரூர்:அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட, வீட்டு உபயோக ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மனு அனுப்பி உள்ளார். அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி, ஆண்டுக்கு 9,000 கோடி ரூபாய்க்கு நடக்கிறது. இதில், 6,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தியில் பெரும்பகுதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்நிலையில், இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. ஏற்கனவே கொடுத்த ஆர்டர்களுக்கு, அமெரிக்க இறக்குமதியாளர்கள் தள்ளுபடி கோருகின்றனர். அப்படி வழங்கவில்லையெனில், வரி தொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை, ஏற்றுமதியாளர்கள் சரக்குகளை அனுப்பாமல் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஏற்றுமதியாளர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கரூர் ஜவுளி நிறுவனங் களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. நெருக்கடி யிலிருந்து மீட்க மத்திய - மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய கோரிக்கைகள்

* வங்கி கடன் வரம்பை பிணையம் இன்றி 25 சதவீதம் கூடுதலாக அதிகரிக்க வேண்டும்.* அவசரகால கடன் உதவி 20 சதவீதம் வரை வழங்க வேண்டும்.* ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு, காப்பீடில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும். * ஏற்றுமதி செய்யும் ஜவுளி பொருட்களுக்கு, 10 சதவீதம் ஊக்கத்தொகை வேண்டும். * ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில், 25 சதவீதம் மானியம் தேவை.* சாலை வரியில், 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி