ரஷ்யாவில் பேஷன் கண்காட்சி இந்தியா ஆர்டர் பெற வாய்ப்பு
திருப்பூர்: சர்வதேச அளவிலான, 'கலெக் ஷன் பிரீமியர் மாஸ்கோ' பேஷன் கண்காட்சி, ரஷ்யாவில் செப்., 2ம் தேதி துவங்கி, நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.உலக அளவிலான ஆயத்த ஆடை இறக்குமதியில், ரஷ்யா நம் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த ஆண்டில் 59,684 கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்துள்ளது. அவற்றில், பின்னலாடைகள் மட்டும், 56.90 சதவீதம். கடந்த ஆண்டில், இந்தியாவில் இருந்து, 863 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவின் மொத்த இறக்குமதி குறைந்திருந்தாலும், இந்தியாவின் ஏற்றுமதி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.https://x.com/dinamalarweb/status/1943129777142898758மாஸ்கோவில் உள்ள குரோக்கஸ் கண்காட்சி அரங்கில், செப்., 2ம் தேதி துவங்கி, 5ம் தேதி வரை, 'கலெக் ஷன் பிரீமியர் மாஸ்கோ' கண்காட்சி நடக்கிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பதன் வாயிலாக, புதிய ஆர்டர்களை ஈர்க்க வாய்ப்புள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.கண்காட்சியில், 30 நாடுகளை சேர்ந்த, 900 'பிராண்ட்'கள் மற்றும் 22,000 சில்லரை வர்த்தகர்கள் பங்கேற்க இருப்பதால், இந்தியாவும் பங்கேற்றால் புதிய ஆர்டர்களை ஈர்க்க வாய்ப்புள்ளதாக அது கூறியுள்ளது.