உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இளம் தலைமுறையினருக்கான நிதி திட்டமிடல் குறிப்புகள்

இளம் தலைமுறையினருக்கான நிதி திட்டமிடல் குறிப்புகள்

கடந்த தலைமுறையினரை விட தற்கால தலைமுறை, முதலீடு நோக்கில் அதிக விழிப்புணர்வு கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக சம பங்கு மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. செயலி மூலம் பங்குகளை வாங்கும் வாய்ப்பும் இதற்கு வலு சேர்க்கிறது. டிஜிட்டல் சேவைகள் நிதி விஷயங்களை எளிதாக்கி இருந்தாலும், பட்ஜெட், நிதி திட்டமிடல் என்று வரும் போது, இளம் தலைமுறையினரிடையே ஈடுபாடு குறைவாக இருக்கிறது. சேமிப்பு மற்றும் முதலீட்டை இளம் வயதிலேயே துவக்குவது ஏற்றது என்பதால், அதற்கேற்ப நிதி திட்டமிடலை மேற்கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம். - மாறும் தன்மை: பணி வாழ்க்கையைத் துவங்கும் போது, ஊதியத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கலாம். பணி மாற்றத்திற்கு ஏற்ப ஊதியம் மாறுபடலாம். எனவே, பட்ஜெட் இதற்கேற்ப வளைந்து கொடுக்க வேண்டும். அத்தியாவசிய செலவுகள் மற்றும் சிறிதளவு அவசர கால நிதி போக, பட்ஜெட் மாறும் தன்மை கொண்டதாக இருக்கலாம்.

மருத்துவ காப்பீடு:

முதலீடு அளிக்கும் பலன் முக்கியம் என்றாலும், இதை கணக்கிடுவதை தள்ளி வைத்துவிட்டு நிதி அடிப்படைகளில் கவனம் செலுத்தலாம். மருத்துவ காப்பீடு பாதுகாப்பு இருப்பது அவசியம். ஆயுள் காப்பீடு தேவை என்றாலும் பின்னர் மேற்கொள்ளலாம். ஆனால், வரி சேமிப்பிற்காக மட்டும் செய்யக்கூடாது.

சொந்த வீடு:

இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்குவது ஈர்ப்புடையதாக இருக்கலாம். ஆனால், வீடு வாங்குவதை சரியாக திட்டமிட வேண்டும். ஊதியம் ஈட்டத் துவங்கிய காலத்தில் பணமாக்கலும், வளைந்து கொடுக்கும் தன்மையும் முக்கியம். எனவே, நீண்ட கால சொத்து உருவாக்கத்தில் பணத்தை முடக்குவது சரியல்ல.

வரிச்சலுகை:

சரியான முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும். இ.எல்.எஸ்.எஸ்., போன்ற முதலீடுகள் வரிச்சலுகை கொண்டிருப்பதோடு, பங்கு சந்தை அறிமுகத்தையும் அளிக்கிறது. மியூச்சுவல் பண்ட் முதலீட்டை துவக்குவதற்கான வழியாகவும் அமையலாம். சந்தையின் செயல்பாடுகளை, போக்குகளை அறிந்து கொள்ளவும் உதவும்.

நிதி இலக்குகள்:

இளம் வயது என்பதால் முதலீடு வாய்ப்புகள் வளர்ச்சி தன்மை கொண்டிருக்க வேண்டும். பணி வாழ்க்கை வளர்ச்சிக்கு ஏற்ப முதலீடுகளும் வளர வேண்டும். தேவையில்லாத கடன்களில் சிக்காமல், நிதி இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நிதி செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி