UPDATED : அக் 19, 2025 03:15 AM | ADDED : அக் 19, 2025 02:54 AM
புதுடில்லி: வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் சரக்கு போக்குவரத்துக்கான செலவு ஒற்றை இலக்கமாக குறையும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்தியாவில் விரைவு சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தடங்களின் அதிவேக விரிவாக்கத்தால், சரக்கு போக்குவரத்து செலவு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைந்துஉள்ளதாக நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் இது ஒன்பது சதவீதம் என ஒற்றை இலக்கமாக குறையும். இது தொழில்துறையினருக்கு பலனளிப்பதோடு, நாட்டின் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்கும். வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை, சரக்கு போக்குவரத்து செலவு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12 சதவீதமாகவும்; சீனாவில் 8 - 10 சதவீதமாகவும் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நம் நாட்டின் வாகனத்துறையை உலகளவில் முதலிடத்துக்கு கொ ண்டு வருவதே மத்திய அரசின் இலக்கு. கடந்த 2014ல் 14 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்திய வாகனத்துறை சந்தை, தற்போது 22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இத்துறையில் நான்கு லட்சம் இளைஞர்கள் பணியாற்றுகின்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வரி வருவாய் வழங்கும் துறையாக இது விளங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2014ல் 14 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்திய வாகனத்துறை சந்தை, தற்போது 22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு சரக்கு போக்குவரத்து செலவு 16%ல் இருந்து 10% ஆக குறைந்துள்ளது; டிசம்பருக்குள் 9 சதவிகிதம் ஆக குறையும் தொழில்துறையினருக்கு பலனளிப்பதோடு, நாட்டின் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்கும்.