உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  எதிர்பார்ப்பை விஞ்சிய ஜி.டி.பி., வளர்ச்சி எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்

 எதிர்பார்ப்பை விஞ்சிய ஜி.டி.பி., வளர்ச்சி எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்

அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகள், கணிப்புகளைத் தாண்டி, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி செப்டம்பர் காலாண்டில் 8.20 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. முந்தைய கணிப்புகள் அனைத்துமே, கிட்டத்தட்ட ஒரு சதவீதம் குறைவாகவே கட்டியம் கூறியிருந்தன. முதல் காலாண்டில் கிடைத்த 7.80 சதவீதம் வளர்ச்சியை விஞ்சி, 8.20 சதவீதம் பதிவாகியிருக்கிறது. 2024 - 25 இரண்டாம் காலாண்டில், வளர்ச்சி வெறும் 5.60 சதவீதம். முதல் காலாண்டு வளர்ச்சியை வைத்து, ஒட்டுமொத்த நிதி ஆண்டின் வளர்ச்சி 6.90 சதவீதம் வரை என பல கணிப்புகள் வெளியாகின. ஆனால், தற்போது அது ஏழு சதவீதத்தை தாண்டியதால் மறுகணிப்பு செய்ய வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி., குறைப்பால் நுகர்வு அதிகரிப்பு, வருமான வரி விலக்கு உயர்வால் மக்கள் செலவழிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை குறைவாக நீடித்ததால், தயாரிப்பு துறையில் உற்சாகம் என பல காரணங்கள் கூறப்பட்டன. ஆனாலும், இந்த வளர்ச்சியை ஒருவரும் கணிக்கவில்லை. இந்த 8.20 சதவீத வளர்ச்சியால், நம் நாட்டின் ஜி.டி.பி., மதிப்பு, கிட்டத்தட்ட 360 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கிறது. எனினும், நடப்பு நிதியாண்டு முடிவில் அது, 378 லட்சம் கோடி ரூபாய் இலக்கை எட்டுவது சிரமம் தான். ஆனால், 369 லட்சம் கோடி ரூபாயை அது தொட்டு விடுவது சுலபம். எனினும், உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற இலக்கும் நடப்பு நிதியாண்டில் மிக அரிதானதே. நீண்ட கால அடிப்படையில், பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய துறைகளான, சிமென்ட், ஸ்டீல், பெட்ரோலியம், மின்சாரம் ஆகியவற்றின் குறியீடுகள் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை. அடுத்ததாக, ஜி.எஸ்.டி., வசூல். வேகமாக விற்றுத்தீரும் நுகர்வோர் பொருட்கள் துறை மற்றும் வாகன விற்பனை துறைகளில், நுகர்வோர் தேவை ஆகியவை அதிகமாக நீடிக்க வேண்டும். நேரடி வரி வசூல் மற்றும் கடன் வழங்குவதும் அதிகரிக்க வேண்டும். ஆனால், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாயாக அதிகரித்திருப்பதால், நேரடி வரி வசூலிப்பில் ஏற்படக்கூடிய தாக்கம் ஜி.டி.பி., வளர்ச்சியில் என்ன செய்யும் என்பது கவனிக்கத்தக்கது. மேலும், கடந்த 2011-12ல், தேசிய கணக்கீட்டு தொடர் வெளியாகத் துவங்கியதில் இருந்து, கம்பெனி விவகாரத் துறை அமைச்சக தரவுகளில் ஏற்பட்ட மாற்றத்தால், தயாரிப்பு துறை குறித்த புள்ளிவிபரங்கள் மிகைபடுத்தப்பட்டதாக இருக்கிறது என, நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இவற்றை கணக்கில் கொண்டால், 2013 - 14ம் நிதியாண்டு முதல், நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சி குறியீடு, ஆண்டுக்கு சராசரி யாக அரை சதவீதம் வரை, கூடுதல் கணிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்திய தேசிய கணக்கீட்டு தொடர் குறித்து, பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப்., அண்மையில் எதிர்மறை கருத்து தெரிவித்தது. ஜி.எஸ்.டி., குறைப்பு, வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு, தயாரிப்பு துறைக்கு ஊக்க திட்டங்கள் ஆகியவற்றால், நாட்டின் ஜி.டி.பி., உலகிலேயே அதிக வளர்ச்சியை பதிவு செய்திருப்பது உண்மையே. அதேநேரம், இவை நீண்ட காலத்துக்கு கைகொடுக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. உலகின் தேவை, அதற்கேற்ப ஏற்றுமதி அதிகரிப்பு, தொடர் மூலதன செலவு, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஆகிய எதிர்வரும் சூழல்கள் தான், நாட்டின் வளர்ச்சி இதே வேகத்தில் பயணிக்குமா என்பதையும்; வளர்ச்சி, 6 முதல் 7 சதவீதமாக சாதகமான அளவில் பதிவாகுமா என்பதையும் முடிவு செய்யும் அம்சங்களாக இருக்கும்.  ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, நிறுவன ஜி.வி.ஏ., எனப்படும் இயக்க லாபம், ஊதியம் ஆகியவையும் எப்.எம்.சி.ஜி., எனும் நுகர்பொருட்கள் மற்றும் வாகன விற்பனை ஆகியவையும் கடந்த காலாண்டில் சிறப்பாக இருந்தன.  நேரடி வரி வசூல்,கடந்த நவ., 10 வரை இரண்டு சதவீதம் உயர்ந்திருப்பது, பொருளாதாரம் துடிப்புடன் இருப்பதை காட்டியது. இது, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் இருக்கலாம். வளர்ச்சி  தனியார் செலவழிப்பு வளர்ச்சி - 7.90 சதவீதம்; அரசு செலவழிப்பு வளர்ச்சி (-)2.70 சதவீதம்  சிறப்பான பருவமழை, வருமான வரி விலக்கு வரம்பு உயர்வால், கிராமப்புற தேவை அபார உயர்வு  மத்திய, மாநில அரசுகளின் மூலதன செலவு கிட்டத்தட்ட 20 சதவீதம் உயர்வு  விவசாய துறை வளர்ச்சி 3.50 சதவீதம் (காரீப் அறுவடை அதிகரிப்பு)  தயாரிப்பு துறை வளர்ச்சி 9.10 சதவீதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ