உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வங்கி லாக்கர் சேவை முடக்கப்படும் அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

வங்கி லாக்கர் சேவை முடக்கப்படும் அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

தங்க நகைகள், பணம், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வங்கி லாக்கர் வசதி உதவுகிறது. லாக்கர் சேவையை பயன்படுத்துபவர்கள் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடாதவர்கள் உடனடியாக இதை செய்து முடிக்க வேண்டும் என வங்கிகள் நினைவூட்டல் வழங்கி வருகின்றன. புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் லாக்கர் சேவை முடக்கப்படும் அபாயமும் இருக்கிறது. லாக்கர் ஒப்பந்தம் புதுப்பிப்பது தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

லாக்கர் ஒப்பந்தம்:

லாக்கர் சேவைகளை பயனாளிகளிடம் இருந்து புதிய வாடகை ஒப்பந்தம் பெற வேண்டும் என ரிசர்வ் வங்கி கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டது. வாடிக்கையாளர் புகார்கள், தொழில்நுட்ப அம்சங்கள், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

கெடு நீட்டிப்பு:

லாக்கர் சேவை செயல்பாடு தொடர்பான வெளிப்படை தன்மை மற்றும் பாதுகாப்பு மேம்பாடு ஆகியவை லாக்கர் புதுப்பிப்பு ஒப்பந்தத்தின் நோக்கமாக அமைகிறது. இதற்கான கெடு இரு முறை நீட்டிக்கப்பட்டது. எனினும், இன்னமும் 20 சதவீத லாக்கர் பயனாளிகள் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருக்கின்றனர்.

வங்கி நினைவூட்டல்:

இந்நிலையில், வங்கிகள் ஒப்பந்தம் புதுப்பிப்பு கெடுவை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க ரிசர்வ் வங்கியிடம் கோரியுள்ளன. மேலும், பயனாளிகளுக்கு நினைவூட்டல் வழங்கி வருகின்றன. புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதவர்கள் லாக்கர் சேவையை முடக்கவும் ரிசர்வ் வங்கியிடம் கோரியுள்ளன.

புதிய ஒப்பந்தம்:

புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தம் பயனாளிகளுக்கு சாதகமான பல அம்சங்களை கொண்டுள்ளன. வங்கிகள் மற்றும் பயனாளிகள் பொறுப்புகளை தெளிவாக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இழப்பீடு தொடர்பான பல அம்சங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. வெளிப்படையான காத்திருப்பு பட்டியலும் அவசியம்.

தொடர் சேவை:

லாக்கர் சேவையை தடையின்றி பயன்படுத்த, புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம். ஒப்பந்த விபரங்களை முழுதும் படித்துப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக வங்கி கிளையை அணுகலாம்; பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ப லாக்கர் காப்பீடு பெறுவதையும் பரிசீலிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை