உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மியூச்சுவல் பண்டு திட்டங்களை ஒப்பிடுவது எப்படி?

மியூச்சுவல் பண்டு திட்டங்களை ஒப்பிடுவது எப்படி?

முதலீடு செய்ய சரியான நிதியை தேர்வு செய்வதற்கு மியூச்சுவல் பண்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்றதாக அமையும்.மியூச்சுவல் பண்டு சிறந்த முதலீடு வாய்ப்பு என்றாலும், இதில் பல வகைகளும், துணை பிரிவுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு நிறுவனங்கள் திட்டங்களை வழங்கி வருகின்றன. இவற்றில் சரியான நிதிகளை தேர்வு செய்வது சவாலாக இருக்கலாம். முதலீட்டாளர்கள் பொருத்தமான நிதிகளை தேர்வு செய்ய, நிதி இலக்குகள், இடர் அம்சங்கள், முதலீடு பலன், அதன் செலவு விகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். அதே நேரத்தில், நிதிகளை ஒப்பீடு செய்வதும் நல்ல உத்தியாக அமையும்.

இணைய வழி

பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் மியூச்சுவல் பண்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்க வழி செய்யும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன. இவற்றில், மியூச்சுவல் பண்டு திட்டங்களை பல்வேறு கால அளவுகளில், இடர் விகிதம், செலவு விகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கலாம். சம பங்கு, கடன் சார் நிதி, ஹைபிரிடி நிதி என நிதியின் வகையை தேர்வு செய்து, மிட்கேப் அல்லது ஸ்மால்கேப் என துணை பிரிவை தேர்வு செய்தால், நிதிகளின் செயல்பாட்டை எளிதாக ஒப்பிட்டு பார்க்கலாம்.ஒரு சில இணைய சேவைகளில், நிதிகளின் முதலீடு தொகுப்பை ஒப்பிட்டு பார்க்கும் மேம்பட்ட வசதியையும் அளிக்கின்றன. மேலும் சில இணைய சேவைகள், இடர் தன்மை, நிதி இலக்குகள் அல்லது முதலீடு காலம் உள்ளிட்ட அம்சங்களையும் குறிப்பிட்டு, அவற்றின் அடிப்படையில் ஒப்பீடு வழங்குகின்றன. இவ்வாறு ஒப்பிட்டு பார்ப்பது, பொருத்தமான நிதிகளை தேர்வு செய்ய உதவும். நிதி இலக்குகள் அல்லது இடர் அம்சத்தின் அடிப்படையில் நிதிகளை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்றதாகவும் அமையும்.

தவறுகள் கவனம்

மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்வு செய்யும் முன், பல்வேறு வாய்ப்புகளை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்றது என்றாலும், இதில் தவிர்க்க வேண்டிய தவறுகளும் இருக்கின்றன. பொதுவாகவே, மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்வு செய்யும் போது, கடந்த கால பலனை முக்கிய அம்சமாக கருதக்கூடாது என சொல்லப்படுகிறது. எனவே, நிதி இதற்கு முன் அளித்துள்ள பலனை ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், கடந்த கால பலன் எதிர்கால பலனுக்கான உத்தரவாதம் அல்ல என்று கருதப்படுகிறது. அதே போல, ஒப்பிடப்படும் நிதிகள் பொருத்தமாக இருக்க வேண்டும். ஒரே வகையில், ஒரே பிரிவில் ஒப்பிட வேண்டும். சம பங்கு நிதியை, கடன்சார் நிதியுடன் ஒப்பிடக்கூடாது. மேலும், என்.ஏ.வி., எனப்படும் நிகர சொத்து மதிப்பையும் ஒப்பிடுவது ஏற்றதாக இருக்காது. இந்த மதிப்பு குறைவாக இருந்தால் பலன் அதிகமாக இருக்கும் என்பதெல்லாம் பிழையான கருத்தாக்க மாகும். இது சரியான நிதியை தேர்வு செய்வதற்கான அளவுகோலாகவும் அமையாது. எனவே, நிதிகளை ஒப்பிடும் போது, கடந்த கால பலனை விட, சீரான தன்மையை பார்க்க வேண்டும். இடர் அம்சங்களை முதன்மையாக கருத வேண்டும். ஒரே கால அளவிலான நிதிகளை ஒப்பிடலாம். செலவு விகிதத்தையும் முக்கிய அம்சமாக கருதலாம். ஒப்பீடு ஒட்டுமொத்த நோக்கில் இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை