பணியாளர் சம்பளத்தை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம்
புதுடில்லி:ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், வரும் 2027க்குள் பணியாளர்களுக்கான மாத சம்பளத்தை 31,000 ரூபாய் வரை உயர்த்த முடிவுசெய்துள்ளது. ஊதிய உயர்வு குறித்து ஹுண்டாய் பணியாளர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இதுகுறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது. வரும் 2027க்குள் இந்த ஒப்பந்தத்தை மூன்று கட்டமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதன்படி, 31,000 ரூபாய் சம்பள உயர்வில், முதற்கட்டமாக 55 சதவீதமும்; இரண்டாம் கட்டமாக 25 சதவீதமும்; மூன்றாம் கட்டமாக 20 சதவீதமும் வழங்கப்பட உள்ளது. இதுதவிர, மருத்துவ வசதி, ஆரோக்கிய திட்டங்கள் உள்ளிட்ட பிற பணியாளர் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் வொர்க்மென் நிலை பணியாளர்கள் இதனால் அதிகம் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் பணியாளர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பே, ஹூண்டாயின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் கூட்டமைப்பாகும். இதில் மொத்தம் 1,981 பணியாளர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். ஹூண்டாய் நிறுவனத்துக்கு இந்தியாவில் மொத்தம் மூன்று உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதில் இரண்டு ஆலைகள் தமிழகத்தில் உள்ளன. எனவே இந்த சம்பள உயர்வால், தமிழக பணியாளர்கள் அதிகம் பயன்பெறுவர்.