மீண்டும் சீன காந்தங்கள் இறக்குமதி
புதுடில்லி:மின்சார வாகனங்கள் மற்றும் வாஷிங் மெஷின், பிரிஜ், 'ஏசி' போன்ற நுகர்வோர் மின்னணு பொருட்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அரிய வகை காந்தங்களை, சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கு பின் இதன் இறக்குமதி மீண்டும் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக 30 சரக்கு பெட்டகங்களின் இறக்குமதிக்கு, வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் உத்தரவாதச் சான்று வழங்கியுள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தக மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, அரிய வகை காந்தம் உள்ளிட்ட ஏழு முக்கிய தாதுக்களின் ஏற்றுமதிக்கு சீனா கடந்த மாதம் கட்டுப்பாடு விதித்தது. இதன்படி, இப்பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள், இவை ராணுவ தளவாடங்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படாது என்றும்; அமெரிக்காவுக்கு மறு ஏற்றுமதி செய்யப்படாது என்றும், உத்தரவாத சான்று பெறுவது கட்டாயம்.