உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உணவகங்களின் விற்பனை தகவல்களை தவறாக கையாளும் டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவக கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

உணவகங்களின் விற்பனை தகவல்களை தவறாக கையாளும் டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவக கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

புதுடில்லி:ஸ்விக்கி, சொமாட்டோ ஆகிய ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள், உணவக விற்பனை தகவல்களை தங்கள் லாபத்துக்கு பயன்படுத்துவதாக, இந்திய உணவக கூட்டமைப்புகள் குற்றம்சாட்டிஉள்ளன. இதுதொடர்பாக, மத்திய வர்த்தகத்துறை செயலர் மற்றும் அமைச்சரை சந்திக்க திட்டமிட்டு வருவதாகவும்; தேவைப்பட்டால் இந்திய போட்டி ஆணையத்தை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

விரைவான டெலிவரி

சொமாட்டோ, தனது பிளிங்கிட் நிறுவனத்தின் வாயிலாக 'பிஸ்ட்ரோ' என்ற வணிகத்தையும்; ஸ்விக்கி, 'ஸ்னாக்' என்ற வணிகத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்திஉள்ளன. இவற்றில் குறிப்பிட்ட சில உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ்களை 10 முதல் 15 நிமிடங்களுக்குள் விரைவாக டெலிவரி செய்கின்றன. இந்நிலையில், உணவு டெலிவரி வணிகத்தில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, உணவகங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் குறித்த தகவல்களைக் கொண்டு, இந்த வணிகங்களை துவங்கி வருவதாக கூட்டமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். குயிக் காமர்ஸ் வணிகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனங்கள், அதற்கான சந்தையாக நடுநிலையோடு செயல்பட வேண்டுமே தவிர, தங்களது தனிப்பட்ட பிராண்டை உருவாக்கி உணவகங்களுக்கு போட்டியாக செயல்பட முடியாது என்று தெரிவிக்கின்றனர். இதனால் ஒட்டுமொத்த உணவக தொழிலுமே பாதிக்கப்படக் கூடும் என்பதால், இதனை அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மறுப்பு

இதனை தடுக்கும் நோக்கில், மின்னணு வர்த்தக விதிகளை உடனடியாக அமல்படுத்த கோரி, விரைவில் மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக கூட்டமைப்பினர் தெரிவித்துஉள்ளனர். தீர்வு கிடைக்காவிட்டால், இந்திய போட்டி ஆணையத்தை அணுக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிஸ்ட்ரோ ஒரு தனிப்பட்ட வணிகம் என்றும்; அதன் வடிவமைப்பில் உணவகங்களின் தரவுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் பிளிங்கிட் நிறுவனம் விளக்கம்அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram Moorthy
ஜன 15, 2025 15:04

நல்ல வேளை இதுவரை இந்த ஆன்லைன் உணவகங்களை பயன்படுத்தியதில்லை


Kalyanaraman
ஜன 15, 2025 07:17

அமேசான் இந்த பாணியை சில வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது. எதெல்லாம் அதிகமாக விற்கப்படுகிறதோ அந்த பொருட்களை அமேசான தனது பிராண்டில் விற்பனை செய்கிறது.


m.arunachalam
ஜன 13, 2025 18:53

அமேசான் விற்கும் பொருள்களை சொந்த தயாரிப்புகளாகவும் உற்பத்தி செய்து விற்கின்றனர் . உணவு விநியோக நிறுவனங்கள் பல விதத்திலும் தவறுகள் செய்கின்றனர். .விழித்துக்கொள்வது நலம் பயக்கும்.


புதிய வீடியோ