சென்னையில் தரவு மையம் இன்பிபீம் அமைக்கிறது
ஆமதாபாத்:சென்னை உட்பட 10 இடங்களில் 200 கோடி ரூபாய் முதலீட்டில், சிறிய அளவிலான தரவு மையங்களை அமைக்க இருப்பதாக, 'இன்பிபீம் அவென்யுஸ்' அறிவித்து உள்ளது.நாட்டில் தற்போது தரவு மையங்கள் சந்தையை பொறுத்தவரை, அமேசான் வெப் சர்வீசஸ், ஐ.பி.எம்.,கிளவுட், கூகுள் கிளவுட், மைக்ரோசாப்ட் அஸ்யூர் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், குஜராத்தை தலைமையிடமாக கொண்ட நிதி தொழில்நுட்ப நிறுவனமான இன்பிபீம் அவென்யுஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், குஜராத், டில்லி என்.சி.ஆர்., உள்ளிட்ட 10 நகரங்களில், அடுத்த 12 முதல் 18 மாதங்களில், 1 அல்லது 2 மெகாவாட் திறன் கொண்ட சிறிய அளவிலான தரவு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஒரு தரவு மையம், அமைக்க குறைந்தபட்சம் 20 முதல் 50 கோடி ரூபாய் வரை செலவாகும். புதிய தரவு மையங்கள், எங்கள் பின்டெக் மற்றும் இ--காமர்ஸ் செயலிகளில், டிஜிட்டல் பேமண்ட்ஸ், ஆன்லைன் பரிவர்த்தனையில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களை குறைக்க உதவும். மேலும், புதிய சட்டத்தின்படி, உள்நாட்டிலேயே தனிப்பட்ட தரவுகள் சேமிப்பதை உறுதி செய்யும்.இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.