இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேச கொள்முதல் வாய்ப்பு
சென்னை: நம் நாட்டின் ஏற்றுமதியாளர்கள், பல்வேறு நாடுகளின் வங்கிகள், நிறுவனங்களின் பணிகளுக்கான, 'டெண்டரில்' பங்கேற்பற்காக, 'குளோபல் டெண்டர் சர்வீசஸ்' என்ற புதிய வசதியை எப்.ஐ.இ.ஓ., எனப்படும் இந்திய ஏற்றுமதியாளர் அமைப்புகளின் சம்மேளனம் அறிமுகம் செய்து உள்ளது. இந்திய வர்த்தக போர்டலில், ஜி.டி.எஸ்., எனப்படும் குளோபல் டெண்டர் சர்வீசஸ் வாயிலாக, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 8,000க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் வழியாக தினமும், 15,000க்கும் அதிகமான சர்வதேச டெண்டர்களை, இந்திய வணிகர்கள் அணுக முடியும். இந்த தளம் வாயிலாக வங்கிகள், அரசு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்களின் டெண்டர்களை ஒரே இடத்தில் நேரடியாக பெற முடியும். இதில், உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் அடங்கும். புதிய வசதி, நம் நாட்டின் ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வணிகத்தை, சர்வதேச அளவில் விரிவுபடுத்த உதவும்.