தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு இத்தாலி ஆதரவு
புதுடில்லி:இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து ஏற்படுத்த, இத்தாலி முழு ஆதரவு தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோரை இத்தாலி துணை பிரதமர் அன்டொனியா டஜானி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சை முடிவுக்கு கொண்டு வருவதில், இத்தாலி ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். இந்தியா - இத்தாலி இடையே நீண்ட கால வர்த்தக உறவு உறுதியாக நீடிப்பதாக கூறிய டஜானி, சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பு மிக அவசியம் என்றார். மத்திய தரைகடல், மத்திய கிழக்கு, உக்ரைன், இந்தோ பசிபிக் என உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் புவி அரசியல், பொருளாதார நிலவரம் குறித்து இந்தியாவும் இத்தாலியும் கருத்துகளை பரிமாறியதாகவும் இத்தாலி துணைப் பிரதமர் தெரிவித்தார்.