உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஒரு பிஸ்கட் கூட விற்காத ஜேன் ஸ்ட்ரீட் ஓராண்டில் குவித்தது ரூ.19,500 கோடி!

ஒரு பிஸ்கட் கூட விற்காத ஜேன் ஸ்ட்ரீட் ஓராண்டில் குவித்தது ரூ.19,500 கோடி!

மும்பை,:அமெரிக்காவின் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும், ஒரு பொருளையும் விற்காமல், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து 19,500 கோடி லாபம் பெற்றது தெரிய வந்துள்ளது.ஜேன் ஸ்ட்ரீட் குழுமத்தின் நான்கு நிறுவனங்களான, ஜே.எஸ்.ஐ., இன்வெஸ்ட்மென்ட், ஜேன் ஸ்ட்ரீட் ஆசியா டிரேடிங், ஜேன் ஸ்ட்ரீட் சிங்கப்பூர், ஜே.எஸ்.ஐ., - 2 இன்வெஸ்மென்ட் ஆகியவை, பங்கு வர்த்தகத்தின் கடைசி நேரத்தில், அதிக அளவிலான பங்குகளை வாங்கிக் குவித்து, விலை அதிகரித்ததும், வர்த்தக முடிவில் விற்றன.இந்நிறுவனங்கள், பங்கு விலையை குறுகிய நேரத்தில் அதிக ஏற்றத்தாழ்வு ஏற்பட செய்வதாகவும், இதுபோன்ற பங்கு வணிகத்தை கைவிடும்படியும் தேசிய பங்குச்சந்தை, கடந்த பிப்ரவரி மாதத்தில் எச்சரித்தது.ஆனாலும், பங்குச்சந்தை வணிக அமைப்பில் உள்ள குறைபாட்டை பயன்படுத்தி, விதிமீறல் இல்லை என்ற கோணத்தில், தொடர்ந்து இந்நிறுவனங்கள் பங்கு விலை மாற்றத்தை ஏற்படுத்தி வந்துள்ளதாக, ஜெரோதா பங்கு வணிக நிறுவனத்தின் சி.இ.ஓ., நிதின் காமத் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற இருண்ட பரிவர்த்தனைகள், அதிக தொகையை போடுதல், எடுத்தல் உள்ளிட்ட, விதிகளுக்கு உட்பட பல ஓட்டைகள் அமெரிக்க பங்குச் சந்தைகளில் சகஜம் என்று அவர் கூறியுள்ளார். அதே பாணியை இந்திய சந்தைகளில் மேற்கொண்டு லாபம் குவித்த ஜேன் ஸ்ட்ரீட் குழுமத்துக்கு, செபி விதித்த தடை சரியான நடவடிக்கை என்று அவர் வரவேற்றுள்ளார்.ஆனால், அதற்குள் ஜேன் ஸ்ட்ரீட் குழுமம், 2024 ஒரே ஆண்டில் குவித்த லாபம் 19,500 கோடி என்ற நிதின் காமத், இது இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பிராண்டான பிரிட்டானி யாவின் ஆண்டு வருவாயை விட அதிகம் என்று கூறியுள்ளார்.ஒரே வேறுபாடு, ஒரே ஒரு பிஸ்கட்டை கூட விற்காமல், ஜேன் ஸ்ட்ரீட் குழுமம் 19,500 கோடியை அள்ளிச் சென்றதுதான் என்று, அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுஉள்ளார்.

எப்படி நடந்தது?

ஒரு நிறுவனத்தின் பங்குகள் மிக அதிக அளவில் ஒரே நேரத்தில் வாங்கப்படும்போது, அதுகுறித்த சாதகமான போக்கு இருப்பதாக கருதி, சில்லரை முதலீட்டாளர்களும் அதை வாங்குவர். இதை பயன்படுத்தி, தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஜேன் ஸ்ட்ரீட் குழும நிறுவனங்கள், கடைசி அரை மணி நேரத்துக்குள் அதிக எண்ணிக்கையில் பங்குகளை வாங்குவது வழக்கம். அதனால், பங்கின் விலையை கணித்து ஜேன் ஸ்ட்ரீட் போன்ற நிறுவனங்கள், அன்றைய தினத்தின் வர்த்தக இறுதி நிமிடங்களில் பங்குகளை விற்று பெரும் லாபம் பார்த்து விட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜூலை 07, 2025 08:36

அமெரிக்காவில் ஜேன் ஸ்ட்ரீட் மாதிரி நூறு ஆளுங்க இருக்காங்க. ஒருத்தர் தில்லுமுல்லு செய்ய வுடமாட்டாங்க. இங்கே ஒருத்தனுக்கும் ஒரு எழவும் தெரியாது. இன்சைடர் டிரேடிங் செய்வதையும் கண்டுபுடிக்க முடியாது. ஜேன் ஸ்ட்ரீட்டுடன் கூட்டுக் களவாணிகள். இங்கேயும் இருப்பாங்க. அவனைப்.புடிச்சா இங்கேயும் மாட்டுவாங்க என்பதால் செபி கேசை மெதுவா ஊத்தி மூடிரும். சில கோடிகள் வாங்கிடும்.