மருத்துவ காப்பீட்டு பிரிவில் களம் இறங்குகிறது எல்.ஐ.சி.,
புதுடில்லி:பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., விரைவில் மருத்துவ காப்பீடு துறையில் நுழைய உள்ளதாக, அதன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், மருத்துவம், வாகனம் உள்ளிட்ட பொதுக் காப்பீடு வர்த்தகத்திலும் ஈடுபட அனுமதிக்கும் வகையில், மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்யும் என அத்துறை நிறுவனங்கள் எதிர்நோக்கி உள்ளன. ஒரே உரிமம்
இதன் வாயிலாக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், அதிக தேவை எழுந்துள்ள மருத்துவ காப்பீடு வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வமாக உள்ளன.தற்போது, நம் நாட்டின் காப்பீட்டுத் துறையில் 70 நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் மருத்துவ காப்பீடு வசதி மட்டும் அளிப்பவை 6 அல்லது 7 நிறுவனங்கள் தான். மற்றவை ஆயுள் மற்றும் பொதுக் காப்பீடு திட்டங்களை வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளில் காப்பீடு வர்த்தகத்துக்கான ஒரே உரிமத்தில், ஆயுள், வாகன, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து காப்பீடு வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே மருத்துவ காப்பீட்டில் உள்ள நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கி, அத்துறையில் எல்.ஐ.சி., ஈடுபட உள்ளதாக கடந்த மே மாதமே தகவல் வெளியானது. விரைவில் அறிவிப்பு
அதை உறுதிப்படுத்தும் விதமாக, மருத்துவ காப்பீட்டில் மிகப்பெரிய பங்கு வகிக்க எல்.ஐ.சி., விரும்புவதாக, அதன் தலைமை நிர்வாகி சித்தார்த் மொகந்தி தெரிவித்துள்ளார்.புதிய நிறுவனத்தை துவங்குவதைவிட, சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கி, சந்தைப் போட்டியில் விரைவாக இடத்தை அதிகரிக்க எல்.ஐ.சி., விரும்புவதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.