உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  மார்ச்சில் நிட் டெக் கண்காட்சி மானியத்துடன் அரங்கு அமைக்கலாம்

 மார்ச்சில் நிட் டெக் கண்காட்சி மானியத்துடன் அரங்கு அமைக்கலாம்

திருப்பூர்: அதிநவீன பின்னலாடை இயந்திரங்கள் அணிவகுக்கும் 'நிட்-டெக்' கண்காட்சி, திருப்பூரில் மார்ச் 6ல் துவங்குகிறது. 'நிட்- டெக் -2026' என்ற, 18வது தொழில்நுட்பக் கண்காட்சி, திருப்பூரில், மார்ச் 6ல் துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது. ஆசிய அளவில், பின்னலாடைத்துறைக்கு என, பிரத்யேகமாக நடக்கும் இயந்திர கண்காட்சி என்ற சிறப்பு பெற்றது.

'நிட்-டெக்' கண்காட்சி தலைவர் ராயப்பன்; சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கூறியதாவது: இரண்டு லட்சம் சதுர அடி பரப்பில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்படும். மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில், கண்காட்சியில் அரங்கு அமைக்கும் பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு, மானியம் வழங்கப்பட உள்ளது. பின்னலாடைத் துறை கண்காட்சிக்கு அரசு மானியத்துடன் அரங்கு அமைக்க, 'ஹைடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் இந்தியா' நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளது. பெண் தொழில்முனைவோர், புத்தொழில் முனைவோர், அனைத்து உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். தங்கள் நிறுவனம் வாயிலாக பணம் ஏதும் செலுத்தாமல், அதிகபட்ச மானியத்தில் அரங்கு அமைத்து கண்காட்சியில் பங்கேற்று, வணிகத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். நிறுவனங்களின் வசதிக்கு ஏற்ப அரங்குகள் அமைத்து கொடுக்கப்படும். பின்னலாடை துறை சார்ந்த அனைத்து வகை இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்படும். ஊசி முதல் பேக்கிங் வரை உள்ள அனைத்து விதமான நவீன இயந்திரங்களும், இயங்கும் நிலையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. குறைந்த செலவில், பசுமை ஆடை தயாரிக்கும் வகையில், அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன. மின் நுகர்வை குறைக்கும் திறனுள்ள இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்படும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இயந்திரத் தயாரிப்பாளர்கள் தங்கள் இயந்திரங்களைக் காட்சிப்படுத்த உள்ளனர். ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. கூடுதல் விவரங்களுக்கு, 98431 71303, 82204 84747 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !