உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கடம்பத்துாரில் மின்னணு உதிரிபாக ஆலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கல்

கடம்பத்துாரில் மின்னணு உதிரிபாக ஆலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கல்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் கண்ணுார் ஊராட்சியில், 'ஜெட்வெர்க் எலக்ட்ரானிக்ஸ்' எனும் மின்னணு சாதன உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று அடிக்கல் நாட்டி பெயர் பலகையை திறந்து வைத்தார்.பதினைந்து ஏக்கர் பரப்பரளவில் 65,000 சதுரடியில் அமையும் ஆலையில், 'வாஷிங் மிஷின், பிரிஜ், ஏசி, கணினி போன்ற மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.நிகழ்ச்சியில், தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், ஜெட்வெர்க் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கேற்றனர்.அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:இந்தியாவின் மின்னணு உற்பத்தி மிகப்பெரிய உயரத்தை எட்டி வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் பிள்ளைப்பாக்கம் மற்றும் மணவூரில் 1,112 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு மின்னணு உற்பத்தி தொகுப்பு மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் இடத்தை வலுப்படுத்த வேண்டும்.ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு, தற்போது 6,000 கோடியை தாண்டியுள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒதுக்கப்பட்டதைவிட பல மடங்கு அதிகம்.இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:தேசிய ஏற்றுமதியில், 36 சதவீத பங்கை கொண்ட இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.இந்தியாவில் ஜெட்வெர்க் நிறுவனத்தின் ஏழாவது தொழிற்சாலை இது. ஜெட்வெர்க் போன்ற புதிய நிறுவனங்களின் முதலீடுகள் நமக்கு வலுசேர்ப்பதோடு நம் வருடாந்திர மின்னணு ஏற்றுமதியை, 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கான இலக்கை செயல்படுத்தும். இந்த தொழிற்சாலை மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் மின்னணு உற்பத்தியில் உலகளவில் தமிழகத்தின் பங்கை வலுப்படுத்தும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.கண்ணுார் ஜெட்வெர்க் எலக்ட்ரானிக்ஸ் ஆலை வாயிலாக, கிட்டத்தட்ட 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை