சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் திட்டங்களை பயன்படுத்த வேண்டும் எம்.எஸ்.எம்.இ., துறை செயலர் வலியுறுத்தல்
சென்னை:“குறைந்த வட்டியில் கடன் மற்றும் மானியம் வழங்கும் திட்டங்களை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் அதுல் ஆனந்த் தெரிவித்தார்.'சிட்பி' சார்பில், சென்னையில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:'சிட்பி' எனும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதிக தொழில் நிறுவனங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியில், கடன், மானியம் என, பல்வேறு திட்டங்களை 'சிட்பி' வழங்கி வருகிறது. இதை, தொழில் முனைவோர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிட்பி தொழில் வளர்ச்சி வங்கி பொது மேலாளர் பிரவீன் குமார் கூறுகையில், “மத்திய அரசு உதவியுடன், சிட்பி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ, நடவடிக்கை எடுத்துள்ளது,” என்றார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி துறையின் இணை இயக்குநர் சுரேஷ் பாபு கூறுகையில், “முத்ரா' கடன் உச்சவரம்பை, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. “தொழில் முனைவோருக்கு உதவும் வகையில், 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 48 பொது பயன்பாட்டு மையங்கள், நாடு முழுதும் துவக்கப்பட்டுள்ளன,” என்றார்.