புதுடில்லி:முதிர்வு காலம் முடிந்து, மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும் மூடப்படாத சிறுசேமிப்பு கணக்குகளை முடக்க இருப்பதாக அஞ்சல் துறை அறிவித்து உள்ளது.அஞ்சல் துறை வெளியிட்ட சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:சிறு சேமிப்பு கணக்குகளான பொது சேமநல நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், கிஷன் விகாஸ் பத்திரம், அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம், அஞ்சலக டிபாசிட், அஞ்சலக தொடர் வைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும். புதிய விதிகளின்படி, அஞ்சல் அலுவலகத்தில், சந்தாதாரர்களால் ஆண்டுக்கு இரண்டு முறை உரிய முறையில் நீட்டிப்பு செய்யாத, முதிர்வடைந்த, செயலற்ற சிறு சேமிப்பு கணக்குகளை கண்டறிந்து முடக்கப்பட உள்ளது. கடினமாக உழைத்து சேமித்த சந்தாதாரர்களை பாதுகாக்கும் விதமாக, ஆண்டுக்கு இரண்டு முறை கணக்குகளை முடக்கும் நடவடிக்கை அஞ்சலகங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜன.,1 மற்றும் ஜூலை 1 என இரண்டு கட்டமாக, கணக்குகளை அடையாளம் கண்டு, முடக்கும் நடவடிக்கைகள், மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் முடிக்கப்படும். இதன்படி, முதிர்வு காலம் முடிந்து, ஜூன் 30 மற்றும் டிச.,31க்குள் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் கணக்குகள், கண்டறியப்பட்டு முடக்கப்படும். சிறு சேமிப்பு கணக்குகள் முடக்கப்படுவதை தவிர்க்க, சந்தாதாரர்கள் டிபாசிட் கணக்குகளை நீட்டிப்பதற்கு உரிய முறையில் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.