பிரதமர் மோடியுடன் குவால்காம் சி.இ.ஓ., சந்திப்பு
புதுடில்லி:டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோன் நேற்று சந்தித்து பேசினார். இது குறித்து பிரதமர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: இந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் எடுத்துவரும் முயற்சிகளைப் பற்றி விவாதித்தோம். இந்தியாவின் சிப் மற்றும் ஏ.ஐ., இலக்குகளுக்கு, குவால்காம் நிறுவனம் அளிக்கும் ஆதரவு மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்க தேவையான திறமையும், மிகப்பெரிய சந்தையும் இந்தியாவிடம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அமெரிக்க சிப் தயாரிப்பாளரான குவால்காம், இஸ்ரேலின் சிப் வடிவமைப்பாளரான ஆட்டோடாக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது தொடர்பாக சீனா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பிரதமருடன் அதன் சி.இ.ஓ., சந்திப்பு முக்கியத்துவம் பெ றுகிறது.