ரிசர்வ் வங்கி - எஸ்.பி.ஐ., அதிகாரிகள் இடையே லடாய்
புதுடில்லி: கருத்து திருட்டு தொடர்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ., அதிகாரிகளிடையே சமூக வலைதளத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், எஸ்.பி.ஐ., பொருளாதார நிபுணர்கள் மீது கருத்து திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துஉள்ளார். ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர், சார்தக் குலாட்டி, தன், 'லிங்க்டு-இன்' பதிவில் தெரிவித்து உள்ளதாவது: எஸ்.பி.ஐ.,யின் கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாத பொருளாதார அறிக்கைகளில் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை அறிக்கைகளின் விளக்கங்கள், வரைபடங்கள் ஆகியவை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை நகலெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களையும் பதிவிட்டுள்ளேன். எஸ்.பி.ஐ., ஆதாரம் என்ற பெயரில் ரிசர்வ் வங்கியிடமிருந்து தான் இவை எடுக்கப்பட்டன என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இவ்வாறு தெரிவித்து உள்ளார். இதற்கு பதிலளித்துள்ள எஸ்.பி.ஐ., பொருளாதார அறிக்கை குழு உறுப்பினர் தபஸ் பரிதா, 'ரிசர்வ் வங்கியின் ஆய்வு நீண்ட காலத்தை அடிப்படையாக கொண்டது. 'அதே நேரத்தில் எஸ்.பி.ஐ.,யின் ஆய்வு கடந்த ஓராண்டு தரவுகளை மட்டும் மையமாக கொண்டது. எஸ்.பி.ஐ.,யின் ஆய்வு முறை, ரிசர்வ் வங்கியின் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது; அசல் தன்மை வாய்ந்தது' என தெரிவித்துஉள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எஸ்.பி.ஐ., நிர்வாகம், இது வருத்தத்துக்குரியது என்றும் பரபரப்பு ஏற்படுத்தும் நோக்கமுடையது என்றும் தெரிவித்துள்ளது.