விலை குறைப்பு ஸ்டிக்கர் விதிகளில் தளர்வு ஜி.எஸ்.டி., குறைப்பின் பலனை அளித்தால் போதும்
புதுடில்லி:ஜி.எஸ்.டி., குறைப்பின் பலனை நுகர்வோர் முழுதுமாக பெறும் வகையில், பேக்கேஜிங் மற்றும் விலை இடம்பெறச் செய்வதில் தயாரிப்பாளர்களுக்கு விதிமுறைகளை மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தளர்த்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: ஜி.எஸ்.டி., குறைப்பு, வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. அன்றைய தேதியில் இருந்து, விலை குறைக்கப்பட்ட பொருட்களை தயாரிப்பாளர்கள் விற்பனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. செப்., 22ம் தேதிக்கு முன் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீது தயாரிப்பாளர்கள், பேக்கிங் செய்வோர், இறக்குமதியாளர்கள் தாமாக முன்வந்து, புதிய விலைக்கான ஸ்டிக்கரை இடம்பெறச் செய்ய வேண்டும். புதிய அதிகபட்ச சில்லரை விலை லேபிளை ஒட்டும்போது, பழைய விலை தெரியும் படி இடம்பெற வேண்டும். வரிக் குறைப்புக்கு ஏற்ப பொருட்களின் விலையை குறைத்தால் போதுமானது, ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமல்ல, தாமாக முன்வந்து இதை செய்யலாம். குறைக்கப்பட்ட விலை விபரங்களை, மொத்த விற்பனையாளர்கள், டீலர்கள், சில்லரை விற்பனையாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் அச்சிட்டு வினியோகிக்க வேண்டும். அதன் அடிப்படையில், குறைக்கப்பட்ட விலையில் நுகர்வோருக்கு விற்பனையாளர்கள் பொருட்களை விற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.