உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.1,156 கோடி முதலீட்டில் துாத்துக்குடியில் ரிலையன்ஸ் நுகர்வோர் பொருட்கள் ஆலை

ரூ.1,156 கோடி முதலீட்டில் துாத்துக்குடியில் ரிலையன்ஸ் நுகர்வோர் பொருட்கள் ஆலை

சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, 'சிப்காட்' தொழில் பூங்காவில், 1,156 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க, 'ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்' நிறுவனம், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் அல்லிகுளத்தில், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் பூங்கா அமைக்கிறது. அங்கு, ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம், 1,156 கோடி ரூபாய் முதலீட்டில் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க உள்ளது. இதற்காக, தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் மற்றும் தமிழக வழிகாட்டி நிறுவனம் இடையே சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து, அமைச்சர் ராஜா அறிக்கை: ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், அதன் அடுத்த பெரிய தொழிற்சாலையை அமைக்க, தமிழகத்தை தேர்வு செய்துள்ளது. இந்நிறுவனம், துாத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் தொழில் பூங்காவில், 1,156 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. அதன் ஆலை, 60 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. அங்கு, பிஸ்கட், மசாலா பொருட்கள் முதல் மாவு வகைகள், சமையல் எண்ணெய் போன்றவற்றின் உற்பத்தியில் ரிலையன்ஸ் ஈடுபட உள்ளது. இந்த ஆலையால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தேசிய அளவில் முன்னணியில் உள்ள எப்.எம்.சி.ஜி., எனப்படும் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையை சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறோம். தமிழகம் முதலீட்டை ஈர்க்காத பெரிய துறைகளே இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிஸ்கட், மசாலா பொருட்கள், மாவு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !