சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க கோரிக்கை
புதுடில்லி:தனியார் சர்க்கரை ஆலைகள், நடப்பு சந்தை ஆண்டில், 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளன. இதுகுறித்து, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான 'இஸ்மா' தெரிவித்துள்ளதாவது: முந்தைய மூன்று ஆண்டு கால சாதனை ஏற்றுமதிக்கு பின், உள்நாட்டில் சீரான வினியோகம் மற்றும் விலை ஏற்றத்தை தடுக்கும் வகையிலும், எத்தனால் தயாரிப்புக்காகவும், கடந்த 2023 - 24ம் ஆண்டு முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.இந்நிலையில், கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, சர்க்கரை போதிய கையிருப்பு உள்ளதுடன், நடப்பு பருவத்தில் உற்பத்தியும் அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எத்தனால் தயாரிப்புக்கு தேவையான சர்க்கரை ஒதுக்கீடு போக, உபரியாக உள்ள சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.