விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி துவக்கம்
சென்னை:விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது. விண்வெளி துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க, விண்வெளி தொழில்நுட்ப நிதியாக, 10 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் கீழ், செயற்கைக்கோள் உருவாக்கம், உதிரி பாகங்கள் உற்பத்தி, ராக்கெட் தொழில்நுட்பம், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட விண்வெளி தொழிலில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தலா, 50 லட்சம் ரூபாய் வரை மானியமாகவோ அல்லது பங்கு மூலதனமாகவோ, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., வழங்க உள்ளது. நிதியுதவி தேவைப்படும் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் டி.என்., இணையதளத்தில் விண்ணப்பிக்க இம்மாதம், 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.