உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கைடன்ஸ் மையத்துக்கு இடம் தேர்வு கோவையில் தொழில்களுக்கு உதவ திட்டம்

கைடன்ஸ் மையத்துக்கு இடம் தேர்வு கோவையில் தொழில்களுக்கு உதவ திட்டம்

சென்னை:தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஆதரவு சேவைகளை வழங்க, கோவையில் உள்ள 'டைடல் பார்க்' அலுவலகத்தில் கிளை அலுவலகம் துவக்க, தமிழக அரசின் 'கைடன்ஸ்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி, முதலீடு செய்ய வைக்கும் பணியை, தமிழக அரசின் 'கைடன்ஸ்' எனப்படும் வழிகாட்டி நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிறுவனம், தொழில் துவங்க தேவைப்படும் பல்வேறு அரசு துறைகளின் அனுமதியை ஒற்றை சாளர முறையில் பெற்றுத் தருகிறது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் பன்னடுக்கு கட்டடத்தில் கைடன்ஸ் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. சென்னைக்கு அடுத்து முக்கிய தொழில் நகரமாக கோவை திகழ்கிறது. இதனால், பிற மாநில தொழில் துறை அதிகாரிகள் துவங்கி முதல்வர்கள் வரை, தங்கள் மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்க, கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி, நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். எனவே, கோவையில் கிளை அலுவலகம் துவக்கி, ஏற்கனவே செயல்படும் தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருக்க கைடன்ஸ் முடிவு செய்து உள்ளது. இதன் வாயிலாக, பல பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுடன் அவ்வப்போது பேச்சு நடத்தி, தேவைப்படும் ஆதரவு சேவைகளை வழங்குவதுடன், அந்நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு பெற்றுத் தரவும் திட்டமிட்டு உள்ளது. மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் சங்கங்களுடன் இணைந்து, கூடுதல் முதலீடுகளை ஈர்க்கவும் வழிவகுத்து கொடுக்கும். தற்போது, கோவை கிளை அலுவலகத்திற்கு, அம்மாவட்டத்தில் உள்ள டைடல் பார்க் கட்டடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ