சமூக ஊடக நிதி ஆலோசனைகள் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை
நிதி ஆலோசனைகளை நாடுவது அவசியம் என்றாலும், அவை தொழில் முறை சார்ந்ததாக இருக்க வேண்டும்.சமூக ஊடகங்கள் வாயிலாக தகவல்களை பெறுவது இயல்பாக மாறியிருக்கும் சூழலில், நிதி தகவல்களை பெறவும் பலரும் சமூக ஊடகங்களை நாடி வருகின்றனர். அதற்கேற்ப தனிநபர் நிதி சார்ந்த சமூக ஊடக சேனல்களும் அதிகரித்துள்ளன. யு டியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் பங்கு சந்தை அலசல்களையும், முதலீட்டு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இவர்களில் பலர் லட்சக்கணக்கான சந்தாதாரர்களை பெற்றுள்ள செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். தொழில் முறை தன்மை
எனினும், சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி ஆலோசனைகளை பெறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் நிதி ஆலோசனைகளை பெறுவது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த ஆலோசனை தொழில் முறை தன்மை கொண்டிருப்பது அவசியம். பொதுவாகவே, நிதி உலகில் தனிப்பட்ட ஆலோசனைகள், உறவினர்கள் அல்லது நண்பர்களின் குறிப்புகளை ஆலோசனைகளாக கருதக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது. சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர்கள் வழங்கும் ஆலோசனைகளும் இவ்விதமே கருதப்பட வேண்டும். முறையான நிதி ஆலோசனை வழங்க, அதற்கான துறை சார்ந்த கல்வித்தகுதி மற்றும் பங்கு சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபியின் அனுமதி தேவை. மாறாக, சமூக ஊடக சேனல்களில் பங்கு ஆலோசனை வழங்குபவர்கள் முறையான கல்வித்தகுதி மற்றும் பயிற்சி பெறாதவர்களாக இருக்கலாம். இவர்கள் வழங்கும் ஆலோசனைகள் தனிப்பட்ட அனுபவம் சார்ந்ததே தவிர, வலுவான நிதி அடிப்படைகள் கொண்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இவர்கள் பரிந்துரைக்கும் நிதி சாதனங்களில் சொந்த முதலீடும் கொண்டிருக்கலாம். இது முரணான அம்சமாகும்.சமூக ஊடகங்களில் செயல்படுபவர்கள் பெரும்பாலும், முதலீட்டாளர்களை கவர உணர்வு சார்ந்த வர்ணனைகள் மற்றும் துாண்டுதல்களில் ஈடுபடலாம். வாழ்வில் ஒரு முறை முதலீடு வாய்ப்பு போன்றவை தவறவிடும் அச்சத்தின் அடிப்படையில் செயல்பட வைக்கும். உணர்ச்சிமயமான நிலையில் முதலீடு முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது. அதே போல, பங்கு சந்தை எழுச்சி அல்லது சரிவின் போது இவர்கள் பயன்படுத்தும் சொற்கள், உணர்வு சார்ந்த சிந்தனையை துாண்டும் வகையில் அமைந்திருக்கலாம். இடர் அம்சங்கள்
சமூக ஊடக நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கும் கருத்துகள், மற்ற அணுகுமுறையை பின்பற்ற வைக்கலாம். முதலீட்டை பொறுத்தவரை, மற்றவர்களை பின்பற்றி நடப்பது பெரும்பாலும் தவறாக அமையலாம். நிதி இலக்குகள் சார்ந்த ஆய்வின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும். அதோடு மனநிலை ஈர்ப்புடையதாக அமையலாம் என்பதாலும் கூடுதல் எச்சரிக்கை தேவை. எல்லாவற்றையும் விட, சமூக ஊடக நிதி ஆலோசகர்கள் யாருடைய மேற்பார்வையின் கீழும் வருவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.தொழில் முறை நிதி ஆலோசகர்கள் செபியில் பதிவு செய்து கொண்டவர்கள். செபியின் நெறிமுறைகள் அவர்களை கட்டுப்படுத்தும். ஆனால், சமூக ஊடக நிதி ஆலோசகர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால், மோசடி மற்றும் ஏமாற்று திட்டங்கள் முன்னிறுத்தப்படும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் முதலீடுகளில் இடர் சார்ந்த அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும். எனவே, நிதி ஆலோசனை வழங்குபவர்களின் நிதி தகுதி, பயிற்சி உள்ளிட்ட அம்சங்களை முதலில் கவனிக்க வேண்டும்.