மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டம் முதல் மாநிலமாக தமிழகம் வெளியீடு
சென்னை:தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.மின்னணுவியல் துறையில் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைகடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும், 'தமிழ்நாடு செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை - 2024'ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இதையடுத்து, தற்போது மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்த, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களை, மாநிலத்திற்கு ஈர்த்திடும் வகையில், மத்திய அரசு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்க, இந்த திட்டம் வழிவகை செய்யும். இதன் வழியே தமிழகத்தில் 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 60,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும் என, தமிழக அரசு தெரிவித்துஉள்ளது.
தமிழக அரசும் தரும்
தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்ததாவது:நாட்டில் மின்னணு துறை ஏற்றுமதியில் தமிழகம் 1.25 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, 100 பில்லியன் டாலர் அதாவது 86 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியை அடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.தற்போது இந்தியாவில் முதல் மாநிலமாக, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான சிறப்பு திட்டத்தை முதல்வர் அறிவித்திருக்கிறார். மின்னணு உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களுக்கு, மத்திய அரசு என்னென்ன சலுகைகளை வழங்குகிறதோ, அதையே தமிழகமும் வழங்கும். மின்னணு உதிரிபாகங்கள் சிறப்பு திட்டத்தின் வாயிலாக, 30,000 கோடி ரூபாய் முதலீடும், 60,000 வேலைவாய்ப்பும் ஈர்க்கப்படும். மின் வாகன துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க பேச்சு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.