உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதிய பாதுகாப்பு விதிகள் வெளியிட்டது தேயிலை வாரியம்

புதிய பாதுகாப்பு விதிகள் வெளியிட்டது தேயிலை வாரியம்

புதுடில்லி: 'தேயிலை உற்பத்தியில், உணவு பாதுகாப்பு தரநிலைகளை முழுதாக கடைப்பிடித்து, நீடித்த நிலைத்தன்மையை எட்ட வேண்டும்' என தேயிலை வாரியம் வலியுறுத்தியுள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேயிலை வாரியம் புதிய பயிர் பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்து உள்ளதாவது: தேயிலை பயிரிடும் சூழலை பாதுகாக்கவும், சிறு விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும் இந்த தரநிலைகள் உதவும். ஒருங்கிணைந்த பூச்சித்தடுப்பு முறைகள், மாற்றுமுறை பூச்சிக்கொல்லி உத்திகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சிறந்த வேளாண் நடைமுறைகள் வாயிலாக, இந்த தரநிலைகளை அடையலாம். இதனால், ரசாயனங்களை சார்ந்திராத நிலையை படிப்படியாக அடைய முடியும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை, நுகர்வோரும் தற்போது விரும்புகின்றனர். எனவே, ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி நிர்வாகத்தை பெரிய அளவில் கடைப்பிடித்து உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு உள்நாட்டு, சர்வதேச ஒழுங்காற்று நடைமுறைகளைப் பின்பற்றும்போது, போட்டித்திறனும் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. தேயிலை பயிரிடும் மாநிலங்களில் மாறும் காலநிலைகள் காரணமாக பூச்சித்தொற்று ஏற்பட்டு, ஆண்டுக்கு 15 முதல் 30 சதவீதம் அளவுக்கு பயிர் சேதம் ஏற்பட்டு நஷ்டம் ஏற்படுவதாக தேயிலை வாரியம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !