உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஐரோப்பிய யூனியன் விடாப்பிடி இந்தியாவும் பதிலுக்கு பதில் வரி

ஐரோப்பிய யூனியன் விடாப்பிடி இந்தியாவும் பதிலுக்கு பதில் வரி

புதுடில்லி:குறிப்பிட்ட சில ஸ்டீல் பொருட்களின் இறக்குமதிகளின் மீதான பாதுகாப்பு வரியை, ஐரோப்பிய யூனியன் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளதால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு, பதிலுக்கு பதில் வரி விதிக்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டே இந்த வரி விதிக்கப்படுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையை சுமுகமாக தீர்ப்பதற்காக, ஐரோப்பிய யூனியனுடன் நடத்தப்பட்ட பேச்சுகள் தோல்வியில் முடிந்ததால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 2018 ஜூலை மாதம் முதல் செயல்பாட்டில் இருந்து வரும் இந்த பாதுகாப்பு வரி விதிப்பின் காரணமாக, இந்தியாவுக்கு இதுவரை கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய்க்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், ஐரோப்பிய யூனியனுக்கு 14,900 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 12,600 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 3,165 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2024 ஜூன் மாதம் வரை வரி விதிப்பு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பின் காரணமாக, ஐரோப்பிய யூனியன் நாடுகள், இப்பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்கி உள்ளதாக, வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.கடந்த நிதியாண்டில் மட்டும், இந்தியாவிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கு 57,100 கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களுக்கான இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாக ஐரோப்பிய யூனியன் விளங்கி வருவதால், அந்த அமைப்பின் வரி விதிப்பு, இந்திய வணிகங்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே இந்தியா தற்போது பதிலுக்கு பதில் வரி விதிக்க உள்ளதாக அறிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை