வர்த்தக பேச்சுக்கான குறிப்புகள்: இந்தியா - அமெரிக்கா இறுதி
புதுடில்லி : இந்தியாவும், அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக பேச்சுகளுக்கான குறிப்புகளை இறுதி செய்துள்ளன. நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி., வான்ஸ், நேற்று முன்தினம் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுகளுக்கான குறிப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதன் அடிப்படையில், கடந்த மாதம் முதலே, இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையே விவாதங்கள் துவங்கின.இந்நிலையில், செப்டம்பர் மாதம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற, இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இதுதொடர்பாக நேரடி பேச்சு நடத்த, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலர் ராஜேஷ் அகர்வால், இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார். இந்தியாவில், அமெரிக்க பொருட்களுக்கான சந்தை அணுகலை அதிகரிக்கவும்; வரி மற்றும் வரி அல்லாத தடைகளை குறைக்கவும் அந்நாடு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, இந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தையில், அமேசான், வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என, அந்நாடு வலியுறுத்தியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டு மின்னணு வர்த்தக சந்தையில் நுழையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, அன்னிய நேரடி முதலீடு, கையகப்படுத்துதல் தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வால்மார்ட் தான் பிளிப்கார்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறது என்றாலும், இந்நிறுவனம் இடைத்தரகராக மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்திய விதிமுறைகளின் படி, அதன் சொந்த தயாரிப்புகளை விற்க இயலாது.
பிளிப்கார்ட் தலைமையகம்
இந்தியாவுக்கு மாறுகிறதுபிளிப்கார்ட் நிறுவனம் அதன் தலைமையகத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. வால்மார்ட்டின் துணை நிறுவனமான பிளிப்கார்ட், இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட ஆயத்தமாகி வருகிறது.அதற்காக, தலைமையகத்தை இங்கு மாற்ற உள்ளது. இதன் வாயிலாக, நம் நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோர் திறனுக்கு தொடர்ந்து பங்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.