மேலும் செய்திகள்
மஞ்சள் ஏலத்துக்கு 5 நாள் விடுமுறை
15-Oct-2025
ஈரோடு:ஈரோடு சந்தையில் மஞ்சள் கொள்முதல் விலை குவின்டால், 14,000 ரூபாயை கடந்து விற்பனையானது. ஈரோடு பகுதியில், ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது. புதிய மஞ்சள் வரத்தால் கடந்த பிப்., மார்ச் மாதம் ஒரு குவின்டால், 15,200 ரூபாய் வரை விற்பனையானது. அதன் பின், 12,000 முதல், 14,000 ரூபாய்க்கு குறைவான விலையில் விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 14,000 ரூபாயை கடந்து மஞ்சள் விற்பனையானது. இங்கு, 1,618 மூட்டைகள் மஞ்சள் விற்பனைக்கு வந்ததில், 883 மூட்டைகள் விற்பனையாகின. விரலி மஞ்சள் குவின்டால், 9,299 முதல் 14,114 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் 8,099ல் இருந்து 13,199 ரூபாய்க்கும் விற்பனையானது. இது குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் இருப்பு, கடந்தாண்டைவிட இந்தாண்டு குறைவு. தற்போது மஞ்சள் விலையில் பெரிய ஏற்ற, இறக்கம் இல்லை. இதனால், விவசாயிகள் தங்களிடம் இருந்த மஞ்சளை விற்பனை செய்து விட்டனர். சில விவசாயிகள் மட்டுமே, விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பு வைத்துள்ளனர். புது மஞ்சள் விற்பனைக்கு வர இன்னும், 90 நாட்களுக்கு மேலாகும். புதிய மஞ்சள் வரத்தாகும்போது கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார். 1 விரலி மஞ்சள் குவின்டால், 14,114 ரூபாய் வரை, கிழங்கு மஞ்சள் 13,199 ரூபாய் வரை விற்பனை 2 புதிய மஞ்சள் வரத்தாகும்போது விவசாயிகளுக்கு இன்னும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
15-Oct-2025