தமிழகத்தில் உரிமை கோரப்படாத டிபா சிட்டுகள் ரூ.3,600 கோடி ஆர்.பி.ஐ., பொதுமேலாளர் தகவல்
வேலுார் : தமிழக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளில் இருந்து, 3,600 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத நிதியாக, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை மீட்க உதவிட, அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளின் கிளைகளில் அக்., 1 முதல் டிச., 31 வரை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வேலுார் மாவட்டத்தில் இத்தகைய தொகையை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கி சென்னை மண்டல பொதுமேலாளர் ராஜ்குமார் பேசியதாவது: நம் நாட்டில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளில், 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்பு தொகை இருந்தால் அவை ரிசர்வ் வங்கியின், டிபாசிட்டர் எஜுகேஷன் அண்டு அவேர்னெஸ் நிதிக்கு மாற்றப்படுகிறது. அவ்வாறு தமிழகத்தில் மட்டும், 1.33 கோடி வங்கி கணக்குகளின் கீழ் 3,600 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளது. வேலுார் மாவட்டத்தில் மட்டும், 2.80 லட்சம் கணக்குகளில் 80 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளது. இதில் இதுவரை, ஒரு கோடி ரூபாய் திருப்பியளிக்கப்பட்டுள்ளது. செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்பு தொகைகள் குறித்து தங்களது வங்கிகளின் இணையதளங்கள் அல்லது ரிசர்வ் வங்கியின் இணையதளமான https://udgam.rbi.org.inவழியாகவும் அறிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன், உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகள் எந்த நேரத்திலும் இத்தொகைகளை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.