விரைவில் மலேஷியாவிலும் யு.பி.ஐ., வசதி
புதுடில்லி: மலேஷியாவுக்கு செல்லும் இந்திய பயணிகள் விரைவில் யு.பி.ஐ., பேமென்ட் வசதியை பயன் படுத்தி பணம் செலுத்தலாம். இதுதொடர்பாக, ரேசர்பே நிறுவனத்தின் மலேசிய துணை நிறுவனமான கர்லெக் மற்றும் என்.பி.சி.ஐ., இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கைகெழுத்தாகியுள்ளது. அண்மையில் மும்பையில் நடந்த குளோபல் பின்டெக் பெஸ்ட் நிகழ்வில் இது ஏற்பட்டது. கடந்தாண்டு மட்டும் 10 லட்சம் இந்தியர்கள் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இதற்கு பெரும்பாலும் அன்னிய செலாவணி சந்தையில் மாற்றப்பட்ட மலேசிய ரிங்கிட் மற்றும் சர்வதேச டெபிட், கிரெடிட் கார்டுகளையே பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்திய பயணிகள் எளிமையான முறையில் விரைவாக பேமென்ட் செய்ய ஏதுவாக, விரைவில் யு.பி.ஐ., வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பேமென்ட்கள், ரேசர்பே கர்லெக் தளத்தின் வாயிலாக மலேசிய வர்த்தகர்களின் கணக்கில், அந்நாட்டு கரன்சியான ரிங்கிட்டாகவே வரவு வைக்கப்படும். இரு நிறுவனங்களின் பங்கு 80 சதவீதம் நம் நாட்டில் யு.பி.ஐ., வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை, இரு நிறுவனங்களால் மட்டுமே கையாளப்படுவதாக 'இந்திய பின்டெக் பவுண்டேஷன்' புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. மாதந்தோறும் கிட்டத்தட்ட 2,000 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இரு நிறுவனங்கள் மட்டும் 80 சதவீத பங்கு வகிப்பது ஆபத்தை விளைவிக்க கூடும் என அதில் எச்சரித்துள்ளது. எனவே, சிறிய நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் யு.பி.ஐ., ஊக்கத்தொகை திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. போன் பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களே கடிதத்தில் பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.