ரூ.24 லட்சம் கோடியை தாண்டிய யு.பி.ஐ., பண பரிமாற்றம்
புதுடில்லி,:கடந்த ஜூன் மாதத்தில் யு.பி.ஐ., வாயிலான பணப்பரிமாற்றம் 24.03 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நடந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.உலகளவில் வேகமான டிஜிட்டல் பணப்பறிமாற்றத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் தெரிவித்துஇருந்தது. ஒவ்வொரு மாதமும் 1,800 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை யு.பி.ஐ., மேற்கொண்டு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கான தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்களின் விரைவான பண பரிவர்த்தனைக்கு இது நம்பகமானதாக மாறியுள்ளது. தற்போது, யு.பி.ஐ., பணப்பரிமாற்றம் ஏழு நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. கடந்த ஜூன் மாத்தில் மட்டும், 1,839 கோடி எண்ணிக்கையில் 24.03 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் யு.பி.ஐ.,யில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு இதே மாதத்தில், 1,388 கோடியாக இருந்த எண்ணிக்கையை விட இது 32 சதவீதம் வளர்ச்சியாகும்.யு.பி.ஐ., அமைப்பு தற்போது 49.1 கோடி தனிநபர்களுக்கும், 6.5 கோடி வணிகர்களுக்கும் தன் சேவையை வழங்கி வருகிறது. இது 675 வங்கிகளை ஒரே தளத்தில் இணைக்கிறது. இதனால் மக்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், கவலையின்றி பணத்தை எளிதாகவும், விரைவாகவும் அனுப்ப முடியும்.