உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏற்றுமதிக்கு உதவ அரசு தொழிற்பேட்டைகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

ஏற்றுமதிக்கு உதவ அரசு தொழிற்பேட்டைகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

சென்னை; வெளிநாடுகளில் பசுமை தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள தொழிற்பேட்டைகளில், சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவர் மோகன் கூறியதாவது:வீடுகளில் அமைக்கப்படும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களுக்கு தான் அரசின் சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் அந்த மின் நிலையத்தை அமைத்தால், மானியம் வழங்கப்படுவதில்லை.வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கவே முன்னுரிமை தருகின்றன. மத்திய அரசும், 'கார்பன்' வெளியேற்றத்தை கட்டுப்படுத்த பசுமை மின்சாரத்தை பயன்படுத்துமாறு தொழில் நிறுவனங்களை அறிவுறுத்துகிறது. நிதிச்சுமையால், சிறு தொழில் நிறுவனங்களால் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் திட்டங்களுக்கு முதலீடு செய்ய சிரமம் உள்ளது. அரசு தொழிற்பேட்டை களில் காலியிடங்கள் அதிகம் உள்ளன. எனவே, அங்கு சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து, அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தொழில் நிறுவனங்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதனால் பசுமை மின்சாரத்தில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவியாக இருக்கும். அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் அதிகம்

நாட்டின் ஏற்றுமதியில் குஜராத், மஹாராஷ்டிராவுக்கு அடுத்து, தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இருந்து கடந்த ஆண்டில், 3.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு, 45 சதவீதமாக உள்ளது. இது, தேசிய அளவில், 40 சதவீதமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !