கடலோர மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உலக வங்கி கடன் தமிழகம், கர்நாடகாவுக்கு ரூ.1,871 கோடி
சென்னை:தமிழகம் மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, உலக வங்கி 1,871 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களின் கடலோர பகுதி வாழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, நெகிழி மாசுபாட்டை குறைப்பது, ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உலக வங்கி, 'ஷோர்' என்ற பெயரில் 'கடலோர பகுதிகளின் மீள்தன்மை மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவின் கடலோர பகுதி வாழ் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக 7,480 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு 1,871 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.பி.ஆர்.டி., எனும் சர்வதேச புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியிடமிருந்து இந்த கடன் வழங்கப்படுகிறது. நாட்டின் கடல் பகுதி, 18,000 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாக உள்ளது. ஆனால் கடல் அரிப்பு, மாசுபாடு, அதிக மீன்பிடித்தல், சதுப்புநிலக் காடுகளின் சீரழிவு மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றின் தாக்கத்தால் கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்தில் உள்ளன. தமிழகம் மற்றும் கர்நாடகாவின் கடலோர மேலாண்மைத் திட்டங்களுக்கு இத்திட்டம் உதவும். இதன் வாயிலாக, ஒரு லட்சம் மக்கள் பயனடைவார்கள் 1. நம் நாட்டில் 11,000 கி.மீ.,க்கும் அதிகமான நீளத்துக்கு கடற்கரை உள்ளது 2. கடற்கரை நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு அரிப்பு, தீவிர காலநிலை மாற்ற பாதிப்பை சந்திக்க வாய்ப்பு 3. கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் கடலோர பகுதிகளை தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர்