உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஜி.எஸ்.டி., சந்தேகங்கள் / ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (10)

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (10)

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.

'வரிகள் உட்பட' என மாற்றலாமே

நான் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறேன். ஜி.எஸ்.டி., அமல் செய்யப்படுவதற்கு முன், 'பில்'லில் விற்பனை வரி சேர்த்து 'அனைத்து வரிகள் உட்பட' எனக் குறிப்பிட்டு விற்பனை செய்து வந்தோம். ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன், 40, 45, 50, 54 சதவீத வரி என இருந்தது.தற்போது ஜி.எஸ்.டி.,யிலும் அதே ஐந்து வகை வரியை ஒன்றாக சேர்த்து, 5 சதவீதம், 12, 18 மற்றும் 24 சதவீத வரியுடன் விற்பனை செய்யப்படுகிறது. கம்ப்யூட்டர் பில்லில் இந்த வரி தனியாக தெரியப்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஒரு பொருளின் விலை ரூ.1,000 எனில், 18 சதவீத வரி சேர்த்து, ரூ.1,180 என, வரி ரூ.180 என்பது தெளிவாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிகிறது.இதனால், பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் வரியைத் தவிர்ப்பதற்காக, பில் வேண்டாம் என வற்புறுத்திக் கேட்கின்றனர். அவ்வாறு தர முடியாது என மறுத்தால், பொருள் வேண்டாம் என மறுத்துவிடுகின்றனர். நன்கு படித்தவர்கள் மற்றும் நல்ல பொறுப்பில் உள்ள வாடிக்கையாளர்களே, தினமும் குறைந்தது 2, 3 பேராவது எங்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். எனவே, ஜி.எஸ்.டி., பில்லில், வரிகள் தனி (எக்ஸ்குளூடிங்) என்பதற்குப் பதிலாக, வரிகள் உட்பட என பில் போட்டால், வாடிக்கையாளருக்கு வரி விவரம் தெரியாது; பில் இல்லாத வர்த்தகம் குறையும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும்.- ஏ.மாரிமுத்து, கோவை.

சரக்கு வாங்கியவர்களை இம்சிக்காதீங்க!

ஜி.எஸ்.டி.ஆர்., 1 (விற்பனை) தாக்கல் செய்ய ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி கடைசி நாள். அதற்குள் தாக்கல் செய்யா விட்டால், தாமத கட்டணம் அல்லது அதற்குப் பின் தாக்கல் செய்ய முடியாத வகையில் முடக்கி வைக்க வேண்டும்.ஏனெனில், ஜி.எஸ்.டி.ஆர்., 1 தாமதமாக தாக்கல் செய்தவர்களிடம் சரக்கு கொள்முதல் செய்தவர்கள் உரிய உள்ளீட்டு வரியை (ஐ.டி.சி.,) அந்த மாதம் கழிக்க முடிவதில்லை; அந்த வரியைக் கட்டி, அடுத்த மாதம்தான் கழிக்க வேண்டியுள்ளது. இது, சிரமமாக உள்ளது.ஜி.எஸ்.டி., அமலான கால கட்டமான 2017-18, 2018--19ம் நிதியாண்டுகளில் போதிய புரிதல் இல்லாமல் அதே மாதத்தில் கழித்தவர்களுக்கு இப்போது அபராதம் கட்டும்படி நோட்டீஸ் வருகிறது.ஜி.எஸ்.டி.ஆர்., 1 தாக்கல் செய்யாமலும், வரி கட்டாமலும் இருப்பவர்களை விட்டுவிட்டு, அவர்களிடம் சரக்கு வாங்கியவர்கள் கட்ட வேண்டும் என்ற இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.-போஸ், விருதுநகர்.தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும். முகவரி:ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.Email: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ