ஆல்பபெட் சந்தை மதிப்பு ரூ.264 லட்சம் கோடியானது
'கூகுள்' நிறுவனத்தின் தாய் நிறுவனமான, 'ஆல்பபெட்' சந்தை மதிப்பு, முதல்முறையாக 3 டிரில்லியன் டாலரை அதாவது கிட்டத்தட்ட 264 லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான நேர்மறை எண்ணம், நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஆகியவை காரணமாக, அமெரிக்க பங்குச்சந்தையில் திங்களன்று, ஆல்பபெட் நிறுவனத்தின் ஏ பிரிவு பங்குகள் 4.60 சதவீதம் உயர்ந்து, பங்கு ஒன்றின் விலை 251.88 அமெரிக்க டாலராகவும், சி பிரிவு பங்குகள் விலை 4.50 சதவீதம் அதிகரித்து, 252.30 அமெரிக்க டாலராகவும் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டன. இதனையடுத்து, 3 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில், 'ஆப்பிள், மைக்ரோசாப்ட' நிறுவனங்களுடன், ஆல்பபெட் நிறுவனமும் இணைந்துள்ளது. ஏ.ஐ., சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 'என்விடியா' நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி டாலரை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.