பிளாக் டீல் குறைந்தபட்ச ஆர்டர் ரூ.25 கோடி ரூபாயாக அதிகரிப்பு
ச ந்தையில் நிறுவன முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்க அல்லது விற்பதற்கான, குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பை, 10 கோடி ரூபாயில் இருந்து, 25 கோடி ரூபாயாக, சந்தை கட்டுப்பாட்டாளரான செபி அதிகரித்து உள்ளது. வரும் டிச.,7 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. செபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: புதிய விதிகளின்படி, பிளாக் டீலில் ஆர்டர் விலை, தற்போதைய பங்கு விலையில் இருந்து, 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆர்டரின் மதிப்பும் குறைந்தபட்சம் 25 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். இந்த ஆர்டரை ரத்து செய்யவோ, மாற்றவோ முடியாது. மேலும், பங்கு சந்தைகள், பிளாக் டீல் தொடர்பான முழு விபரங்கள், நிறுவனத்தின் பெயர், வாடிக்கையாளர் பெயர், எத்தனை பங்குகள் வாங்கப்பட்டது அல்லது விற்கப்பட்டது, வர்த்தக விலை ஆகியவற்றை, அன்றைய வர்த்தக நாளில், வர்த்தக நேரம் முடிந்த பின் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. அது என்ன பிளாக் டீல்? பங்குச் சந்தை வர்த்தகத்தில் 'பிளாக் டீல்' என்பது, ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை ஒரே பரிவர்த்தனையில் வாங்குவது அல்லது, விற்பது ஆகும். இது, பொதுவாக பெரு நிறுவன முதலீட்டாளர்கள் அதாவது, மியூச்சுவல் பண்டுகள், ஹெட்ஜ் பண்டுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் போன்றோர் மத்தியில் நடைபெறும்.