உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மீண்டும் வைப்பு நிதி திட்டங்கள் ஆர்வம் காட்டும் பெருநிறுவனங்கள்

மீண்டும் வைப்பு நிதி திட்டங்கள் ஆர்வம் காட்டும் பெருநிறுவனங்கள்

சென்னை:கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து, இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்கள் மீண்டும் வைப்பு நிதி பெறும் திட்டங்களை ஆரம்பித்துள்ளன. பொதுவாக வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் தான் வைப்பு நிதி பெற்று, வட்டி வழங்கும். பொதுமக்களும், மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்திக் கொள்வர். ஒருசில ஆண்டுகள் முன் வரை கூட, பல தொழில் நிறுவனங்கள் வைப்பு நிதி பெற்று வந்தன. அவர்களுடைய தொழில் தேவைக்கான முதலீட்டை வங்கிகளிடம் இருந்து பெறுவதுடன், பொதுமக்களின் சேமிப்புகளைப் பெறுவதன் வாயிலாகவும் ஈடுசெய்து வந்தன. வட்டி குறைவு கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் இந்த நிலை மாறியது. பெரு நிறுவனங்கள், பொதுமக்களிடம் நிதி திரட்டாமல் இருந்தன. இப்போது, மீண்டும், 'கோத்ரேஜ் அண்டு பாய்ஸ், ஹாக்கின்ஸ் குக்கர்' உள்ளிட்ட நிறுவனங்கள், வைப்பு நிதி திரட்டத் துவங்கியுள்ளன. வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை விட, பொதுமக்களிடம் இருந்து திரட்டும் முதலீட்டுக்கான வட்டி விகிதம் குறைவு என்பதாலேயே, அவர்கள் இப்படியொரு முயற்சியில் இறங்கியுள்ளனர். பொதுமக்களுடைய பார்வையில், இது கொஞ்சம் சிறப்பான வாய்ப்பு. ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதங்களைக் குறைத்துவிட்ட காரணத்தால், பல பொதுத் துறை, தனியார் துறை வங்கிகளின் சேமிப்பு வட்டி விகிதங்கள் கணிசமாக குறைந்துவிட்டன. ஓராண்டு காலத்துக்கே 6.25 முதல் 6.75 சதவீதம் வரை தான் வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் கிடைக்கும். அதிக நம்பிக்கை ஆனால், பெருநிறுவனங்கள், வைப்புநிதித் திட்டங்களுக்கு 7.50 முதல் 7.75 சதவீதம் வரை வட்டி தருகின்றன. மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்தால் 8 சதவீதம் வரைக்கும் வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.25 சதவீத வட்டி கிடைக்கும். வைப்பு நிதித் திட்டங்களை அறிமுகம் செய்பவை இந்தியாவின் பெருநிறுவனங்கள் என்பதால், அவற்றின் நம்பகத்தன்மை கூடுதலாக இருக்கிறது. அதேசமயம், அபாயங்கள் இல்லாமலும் இல்லை. இந்த நிறுவனங்களின் கிரெடிட் ரேட்டிங், கடந்த ஒருசில ஆண்டுகளில் அந்நிறுவனங்கள் ஈட்டியுள்ள லாபம், பெற்றுள்ள கடன்கள் உள்ளிட்ட விபரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொண்டே, இவற்றில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும். இத்தகைய பெருநிறுவன வைப்பு நிதித் திட்டங்களை, வங்கிகளின் வைப்பு நிதித் திட்டங்களோடு ஒப்பிடக் கூடாது. பெருநிறுவனங்களோடு ஒப்பிடும் போது, வங்கி சேமிப்புகளின் பாதுகாப்பு மிக அதிகம். ஒருவேளை இந்த நிறுவனங்கள் சரியாக இயங்கவில்லை என்றால், கார்ப்பரேட் வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்தோருக்கு பணம் உடனடியாக திரும்ப கிடைக்காது. மேலும், வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் வழங்கக்கூடிய உத்தரவாதமும் இதற்கு கிடையாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை