பண்டிகை கால விற்பனை: கிரெடிட் கார்டு முன்னிலை
இ -காமர்ஸ் தளங்களின் பண்டிகை கால விற்பனையில், டெபிட் கார்டுகளை பின்னுக்கு தள்ளி, கிரெடிட் கார்டுகள் வாயிலான பரிவர்த்தனைகள் முன்னிலை பெற்றுள்ளன. கிரெடிட் கார்டுகளில் பணம் செலுத்த, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ - காமர்ஸ் தளங்களில், பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அளிக்கப்படுகின்றன. நவராத்திரியில் துவங்கி, சிறப்பு பண்டிகைக்கால விற்பனை என்ற பெயரில் அவ்வப்போது இந்த தளங்கள் அறிவிக்கும் ஒரு வார கால சிறப்பு விற்பனையில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், டெபிட் கார்டு, யு.பி.ஐ., வாயிலாக வங்கிக் கணக்கில் இருக்கும் பேலன்ஸில் இருந்து பணம் செலுத்துவதைவிட, கிரெடிட் கார்டு பயன்படுத்தி கடனில் பொருள் வாங்குவோர் அதிகரித்துள்ளனர். இது, கிரெடிட் கார்டை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ளது. டெபிட் கார்டு இரண்டாம் இடம் வகிக்கும் நிலையில், யு.பி.ஐ., வழி பண செலுத்தல்கள் பின்தங்கியுள்ளன.