பண்டமென்டல் அனாலிசிஸ் : செயல்திறன் மிக்க வங்கியாக உருவெடுத்துள்ளது
இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வங்கி ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி. 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், கடன் புத்தக மதிப்பையும்; 18 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத் தொகையையும் இந்த வங்கி கொண்டிருக்கிறது. வளர்ச்சி, லாபம் மற்றும் ரிஸ்க் ஆகியவற்றில், இந்த வங்கி தொடர்ந்து மிகச்சிறந்த நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. கடன் மற்றும் வைப்புத்தொகை வளர்ச்சி
நட--ப்பு 2025 -- 26 இரண்டாவது காலாண்டில், இந்த வங்கியின் கடன்கள், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 10.30 சதவீத வளர்ச்சியும்; முந்தைய காலாண்டு அடிப்படையில் 3.20 சதவீதம் வளர்ச்சியையும் அடைந்துள்ளது. சில்லரை கடன்கள், சிறு, குறு நிறுவன கடன்கள், வணிகப் பிரிவு வங்கி ஆகியவற்றில் வளர்ச்சி காணப்படுகிறது. வங்கி வழங்கியுள்ள மொத்தக் கடனில் 21 சதவீத கடன், வணிகப் பிரிவு வங்கி வாயிலாக வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த மொத்த கடனில் இந்த பிரிவின் பங்களிப்பு 16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவு ஆண்டுக்கு 25 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. ரீடெய்ல் கடன்கள் என்று சொல்லக்கூடிய சில்லரை கடன்கள் மற்ற பிரிவுகளைக் காட்டிலும் வலுவாக உள்ளது. வாகனக் கடன், தனிநபர் கடன்களில் வலுவாக உள்ளது. மேலும் சிறு, குறு நிறுவன கடன்களும் வேகமெடுத்துள்ளன. வைப்புத் தொகை விகிதம், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 7.70 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால், முந்தைய காலாண்டை காட்டிலும் வளர்ச்சி அதே நிலையில் நீடிக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நடப்பு கணக்கு-, சேமிப்பு கணக்கு விகிதம் 40.90 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சராசரி கடன் -வைப்புத்தொகை விகிதம், கடந்த காலாண்டை காட்டிலும் 0.50% சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த இரு காலாண்டுகளாக கடன் - வைப்புத்தொகை விகிதம் 400 புள்ளிகள் அதிகரித்துள்ளது. சி.ஆர்.ஆர்., குறைக்கப்பட்டதன் வாயிலாக உருவாகும் ரொக்கத் தொகையால், கடன் -வைப்புத்தொகை விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ்வங்கி தங்களது சேவைகளை 40 சதவீதம் எளிமைப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மையும் வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேம்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த 'ஐலென்ஸ், இன்ஸ்டாபீஸ், டிஜிஈஸ்' போன்ற டிஜிட்டல் தளங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வருவாய்
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிகர வட்டி வரம்பு 4 புள்ளிகள் குறைந்து, 4.30 சதவீதமாக உள்ளது. ஆனால், இதையொட்டிய மற்ற வங்கிகளின் நிகர வட்டி வரம்பு, இரட்டை இலக்கத்தில் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாக, இவ்வங்கி ரிஸ்க் மேலாண்மையில் சிறந்து விளங்குவது தெரிகிறது. வங்கியின் செலவு -வருமான விகிதம் 38 சதவீதமாக மேம்பட்டுள்ளது. சேவைகளை டிஜிட்டல் மயமாக்கியதே இதற்கு காரணம். வங்கியின் சொத்து தரம்
வங்கியின் மொத்த வாராக் கடன், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், -9 புள்ளிகள் குறைந்து, 1.58 சதவீதமாக உள்ளது. மேலும், நிகர வாராக் கடன் 0.39 சதவீதமாக உள்ளது. கொடுக்கப்பட்ட கடன்களில், வாராக் கடன்களாக மாறுவதன் மதிப்பு, கடந்த காலாண்டில் 5,030 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. இது சாதகமான அம்சம். இதுவே, நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 6,250 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், சில்லரை கடன்கள் முறைப்படுத்தப்பட்டது தான். எம்.எஸ்.எம்.இ., மற்றும் வணிக வாகனக் கடன்களில் அழுத்தத்தைக் காணும் நிலையில், வங்கியின் பன்முகப்படுத்தப்பட்ட கடன் புத்தகமும்; எச்சரிக்கையான கடன் வழங்கலும் அதன் சொத்து தரத்தை உறுதியாக வைத்துள்ளன. வலுவான வளர்ச்சி இந்த வங்கிக்கு அதன் துணை நிறுவனங்கள், மேலும் வலுவான வளர்ச்சியை ஏற்படுத்தி தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு, ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் போன்ற துணை நிறுவனங்கள், 20 சதவீத லாபத்தை வழங்கி வருகின்றன. இந்த விரிவுபடுத்தப்பட்ட சேவைகள் வாயிலாக, வங்கியின் வருமானம் மற்றும் அதன் நிலைத்தன்மையும் மேம்படுகிறது. இது மற்ற நிறுவனங்களிடமிருந்து வேறுபட்டு தனித்து நிற்க உதவி புரிகிறது. முன்னணி வகித்தல்
இவ்வங்கி தற்போது கிட்டத்தட்ட 2.30 சதவீத ஆர்.ஓ.ஏ., மற்றும் 17% ஆர்.ஓ.இ., வழங்குகிறது. பொதுவாக மிகப் பெரிய வங்கிகளில் இந்த விகிதங்கள் சிறப்பாக உள்ளன. எச்.டி.எப்.சி., வங்கி மிகப் பெரிய வங்கி என்றாலும்; ஐ.சி.ஐ.சி.ஐ., சிறப்பான செயலாக்கத்தால், முன்னணி வகிக்கிறது. கொரோனா காலத்திற்குப் பின் மற்றும் எச்.டி.எப்.சி., - எச்.டி.எப்.சி., வங்கி இணைப்பு நடைபெற்றபின், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இந்திய வங்கித் துறையின் செயல்திறன் இயந்திரமாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ச்சியான சிறந்த முடிவுகளை வழங்கி வருகிறது. எதிர்பார்ப்புகள்
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மிகுந்த வளர்ச்சி விகிதத்துடன் வருமானத்தை தொடர்ந்து நீட்டிக்கும் வகையில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் வளர்ச்சி, குறிப்பாக எஸ்.எம்.இ., மற்றும் வணிக வங்கித்துறை வாயிலாக, அதன் இணை வங்கிகளைவிட வேகமாக இருக்கும். வட்டி விகிதக் குறைப்புகள் ஏற்பட்டால், வட்டிவிகித வித்தியாசம் ஓரளவு குறையலாம். ஆனால், வங்கியின் திறன் மற்றும் ரிஸ்க் மேலாண்மை தாக்கத்தை குறைக்கும். நிரூபிக்கப்பட்ட செயல்திறன் அடிப்படையில், கடன் வளர்ச்சி மந்தமடைந்தாலும் வங்கி துறையைவிட வேகமாக வளர சிறந்த நிலையில் இவ்வங்கி உள்ளது. தற்போது இந்தியாவின் வலுவான, செயல்திறன் மிக்க வங்கியாக, ஒரு சிறந்த இடத்தை நிலைநாட்டியுள்ளது. கடன் வழங்குவதில் சிறந்த முறை, டிஜிட்டல் மயமாக்கம், வலுவான ஆர்.ஓ.இ., ஆகியவற்றால், தற்போதையை சூழலில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிச்சயம் வெற்றி பெறும் நிறுவனமாக வளரும் வாய்ப்புள்ளது. நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தை கருத்தில் கொள்ளலாம். கடன் வழங்குவதில் சிறந்த முறை, டிஜிட்டல் மயமாக்கம், வலுவான ஆர்.ஓ.இ., ஆகியவற்றால் தற்போதையை சூழலில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிச்சயம் வெற்றி பெறும் நிறுவனமாக வளரும் வாய்ப்புள்ளது ஷ்யாம் சேகர், ஐதாட்பிஎம்எஸ் பங்கு ஆய்வு குழு