அடுத்த ஓர் ஆண்டுக்குள் நிப்டி 26,500 புள்ளிகளை எட்டும் கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு
மேற்காசிய பதற்றம் குறுகிய காலத்தில் சந்தையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தினாலும், இந்தியாவில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடுகள் படிப்படியாக மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச தரகு நிறுவனமான 'கோல்டுமேன் சாக்ஸ்' தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நிப்டி குறியீடு 2027ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 26,500 புள்ளிகளை எட்டும் என்றும் இது தற்போதைய நிலையிலிருந்து கிட்டத்தட்ட 10 சதவீதம் உயரக்கூடும் என்றும் கணித்துள்ளது. கோல்டுமேன் சாக்ஸ் மேலும் தெரிவித்து உள்ளதாவது: அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை கட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம்; உள்நாட்டு பொருளாதார சூழல் மேம்படுவதும், இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு தற்போது குறைவாக இருப்பதும் சந்தையின் மனநிலையை படிப்படியாக சாதகமாக மாற்றும். நடப்பு 2026ம் ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 2.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை வெளியேற்றினர். ஆனால், ஜூன் மாத நடுப்பகுதி முதல் அவர்கள் மீண்டும் 19,000 கோடி ரூபாய் அளவுக்கு நிகர முதலீடு செய்து உள்ளனர். தற்போது, உலகளாவிய பண்டுகள் இந்திய பங்குகளில் குறைந்த அளவிலேயே முதலீடு செய்துள்ளதால், இனி முதலீட்டை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வங்கி, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களை விட உள்நாட்டு வருவாய் சார்ந்த பெரிய நிறுவனங்கள் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளாக இருக்கும். நிறுவனங்களின் லாப மதிப்பீடுகள் குறைவது மற்றும் அதிக மதிப்பீடு போன்றவை இன்னும் சவாலாக உள்ளது; இருப்பினும் உள்நாட்டு பொருளாதார மீட்சி சந்தைக்கு ஆதரவாக அமையும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.