உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  அடுத்தாண்டில் நிப்டி 50 குறியீடு 30,000 புள்ளிகளை தொடும்

 அடுத்தாண்டில் நிப்டி 50 குறியீடு 30,000 புள்ளிகளை தொடும்

'அரசின் நிலையான கொள்கை, ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆகியவை காரணமாக, தேவை அதிகரிக்கும் என்பதால், அடுத்தாண்டு இறுதிக்குள், நிப்டி 50 குறியீடு, 30,000 புள்ளிகளை தொடும்' என, சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான ஜே.பி.மோர்கன் கணித்துள்ளது. கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பின், நிப்டி 50 குறியீடு, நேற்றைய வர்த்தகத்தின் போது, புதிய உச்சமாக 26,310.45 புள்ளிகளையும், சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 86,055.86 புள்ளிகளையும் தொட்டது. சென்செக்ஸ் 86,000 புள்ளிகளை தாண்டுவது, இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், நிப்டி குறியீடு தொடர்பான மதிப்பீட்டை உயர்த்தியதற்கான காரணங்கள் குறித்து, ஜே.பி.மோர்கன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஏற்றுமதி சார்ந்த துறைகளில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு, வலுவான உள்நாட்டு தேவை மற்றும் நிலையான மூலதன செலவினங்கள் ஆகியவை, வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளன. இதன் காரணமாக, எம்.எஸ்.சி.ஐ., குறியீட்டில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய், வரும் 2026ம் ஆண்டில் 13 சதவீதமாகவும், 2027ம் ஆண்டில் 14 சதவீதமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிற வளரும் நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்திய நிறுவனங்களின் பங்குகள் அதிக விலையில் தொடரும். எனினும், பிற நாடுகளின் சந்தையில் உள்ள பங்கு விலைக்கும், இந்திய நிறுவனங்களின் பங்கு விலைக்கும் உள்ள வித்தியாசம், தற்போது குறைந்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும்பட்சத்தில், முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து, நிப்டி 50 குறியீடு மேலும் அதிகரிக்க கூடும். சமீபத்திய காலாண்டுகளில், இந்திய பங்குச் சந்தையில் நீடித்து வந்த பங்குகளின் மதிப்புக் குறைப்பு சுழற்சி, நிதி மற்றும் பணக்கொள்கை காரணமாக, இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. நிறுவனங்களின் வலுவான அடிப்படை மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் வலுவான முதலீடு தொடர்வது ஆகியவை, எம்.எஸ்.சி.ஐ., இந்தியாவின் குறியீட்டை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டை உயர்த்த காரணங்கள் 1 இந்தியாவின் உள்நாட்டு சந்தை வலுவான நிலையில் இருப்பது 2 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கை ஆதரவு 3 நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் பட்சத்தில், முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து, நிப்டி 50 குறியீடு மேலும் அதிகரிக்க கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !