UPDATED : டிச 22, 2025 01:31 AM | ADDED : டிச 22, 2025 01:12 AM
பங்குச் சந்தையில் புதிதாக இணையும் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, கடந்த அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில், நவம்பரில் 11.60 சதவீதம் சரிந்ததாக தேசிய பங்குச் சந்தை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது: நவம்பரில் மட்டும் 13.20 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், நவம்பரில் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி, பதிவு செய்த ஒட்டுமொத்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 12.30 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளாவிய சந்தை போக்குகளில் காணப்படும் நிச்சயமற்ற சூழல், அன்னிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேற்றம் ஆகியவை சந்தையில் புதிய முதலீட்டாளர்கள் இணைவதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நடப்பாண்டு ஜனவரி - நவம்பர் வரையிலான காலத்தில், சராசரியாக மாதத்துக்கு 12.80 லட்சம் முதலீட்டாளர்கள் வீதம், 1.40 கோடி முதலீட்டாளர்கள் அதிகரித்துள்ளனர். 2024ம் ஆண்டு இதே காலத்தில், சராசரி மாதத்துக்கு 19.30 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் வீதம், 2.10 கோடி முதலீட்டாளர்கள் இணைந்திருந்தனர். முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், மண்டல வாரியாக, மேற்கு இந்தியா தவிர, பிற மண்டலங்களில் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 15 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மேற்கு இந்தியாவில் மட்டும், 11.60 சதவீதமாக வளர்ச்சி குறைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.