உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐ.பி.ஓ.,வில் அதிகரிக்கும் ஆபர் பார் சேல் முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஐ.பி.ஓ.,வில் அதிகரிக்கும் ஆபர் பார் சேல் முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

புதிய பங்கு வெளியீடுகளின் போது, ஏற்கனவே முதலீடு செய்த பெருமுதலீட்டாளர்கள் தங்கள் பங்கை விற்பனை செய்யும், 'ஆபர்- பார் -சேல்' என்ற வழிமுறையை பயன்படுத்துவர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 'ஆபர்- பார் -சேல்' என்பது, புதிய பங்கு வெளியீட்டின் போது வழக்கமாக பின்பற்றக்கூடிய ஓர் அம்சம் தான். ஆனால், ஏன் இப்போது அது சம்பந்தமாக தனித்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்ற கேள்வி எழலாம். 'ஆபர்- பார் -சேல்' என்ற வழிமுறையின் வாயிலாக, ஏற்கனவே அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள புரமோட்டர்கள், நிறுவன முதலீட்டாளர்கள், தனிநபர்கள், தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யலாம். அதாவது, அவர்கள் அந்த நிறுவனம் உருவான காலத்தில் துணிந்து ரிஸ்க் எடுத்து முதலீடு செய்திருப்பர். அவர்கள், குறிப்பிட்ட தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்துவிட்டு, லாபத்தோடு வெளியேறிவிட முனைவர். இந்த வழிமுறையைக் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவில் பயன்படுத்தியோர், நிறுவனங்களின் புரமோட்டர்கள் தான் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2025ல் வெளியான ஐ.பி.ஓ.,களில், மதிப்பின் அடிப்படையில், புரமோட்டர்களின் 'ஆபர்- பார் -சேல்' மட்டும், 68.50 சதவீதமாக இருக்கிறது. 2023ல் இதுவே 52.80 சதவீதமாக இருந்து படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான எச்.பி.டி., பைனான்சியல் சர்வீசஸ், ஹெக்ஸாவேர் டெக்னாலஜீஸ், ஸ்காலஸ் பெங்களூரு, விக்ரம் சோலார், பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ், ஆப்கான்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்ட முக்கியமான ஐ.பி.ஓ.,கள் அனைத்திலும், புரமோட்டர்களே தங்களுடைய பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ய பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இது மட்டுமல்ல, நிறுவனமானது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்னரும், பல புரமோட்டர்கள், பிளாக் டீல்களின் வாயிலாக தங்களுடைய பங்குகளை விற்பனை செய்வதும் தொடர்கிறது. ஆரம்ப காலத்தில் ரிஸ்க் எடுத்து நிறுவனத்தை வளர்த்தவர்கள், அதற்கான பலனை அறுவடை செய்வதில் என்ன தவறு என்ற கோணம் முன்வைக்கப்படுகிறது. நிச்சயமாக அதில் தவறு எதுவும் கிடையாது. ஆனால் இன்னொருபுறம், நிறுவனத்தை வளர்த்தெடுத்த புரமோட்டர்களே, தங்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்வது என்பது, அந்த நிறுவனத்தின் மீதான அடிப்படை நம்பிக்கையையே அசைப்பதாக இல்லையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதிலும் ஒரு பங்கு வெளியீட்டின் போது, புதிய பங்குகளை விட மிக அதிக அளவில் இந்த வழியில் பங்குகள் விற்பனை செய்யப்படும்போது, சந்தேகங்கள் இயல்பாகவே எழுகின்றன. ஐ.பி.ஓ., மீதான மோகம் அதிகரித்திருக்கும் நிலையில், புரமோட்டர்கள் தங்கள் பங்குகளை நல்ல லாபத்தில் விற்றுவிடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அதை பயன்படுத்திக் கொண்டு, கடைசியில் நிறுவனத்தை கைவிட்டுவிடக்கூடாது என்ற சிறு முதலீட்டாளர்களின் ஆதங்கத்தையும் அப்படியே ஒதுக்கித் தள்ளுவதற்கில்லை. இத்தகைய சூழலில் புதிய பங்கு வெளியீட்டின் போது பங்குகளை வாங்குவதை விட, செகண்டரி மார்க்கெட்டில் பங்குகளை வாங்குவது குறித்து ஆலோசிப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஆராய்ந்து வாங்குவதே சிறந்தது ஆபர்- பார் -சேல் முறையில் புரமோட்டர்கள் அல்லது முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால், அந்த நிறுவனம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் இருக்கும். இந்த நிலையில், எந்த நோக்கத்திற்காக புரமோட்டர்கள் பங்குகளை விற்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். அதேநேரம், ஐ.பி.ஓ.,வில் வரும் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி, எதிர்காலம், போட்டி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்வதும் அவசியம். அந்நிறுவனம் தனித்துவமாக தொழில் செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். நியாயமான விலையில் வரும் ஐ.பி.ஓ.,களில், விண்ணப்பித்த பங்குகள் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறிதான். இத்தகையோர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவுடன், பங்குகளை ஆராய்ந்து வாங்குவது சிறந்தது. - நாகப்பன், நிதி ஆலோசகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ