மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் தொழில் துறையினரிடம் கருத்து கேட்பு
புதுடில்லி:மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்களை அமைப்பது குறித்து, தொழில்துறையினரிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய அரசு, மின்னணு வர்த்தகம் வாயிலாக ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், அதற்கான ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்து இருந்தது. இதன் ஆரம்ப கட்டமாக 10 முதல் 15 மையங்களை அமைக்க திட்டமிடப் பட்டு வருவதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. பொது மற்றும் தனியார் துறை சேர்ந்து அமைக்கப்படவுள்ள இந்த மையங்கள், எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கும் என கூறப்படுகிறது. விரைவான ஏற்றுமதி, திருப்பி அனுப்பப்படும் பொருட்களை எளிதாக இறக்குமதி செய்வது, இந்தியா மற்றும் வெளிநாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது ஆகியவை இதன் நோக்கமாகும். இந்நிலையில், இந்த மையங்களை அமைப்பது குறித்து, தொழில்துறையினரிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.