வட்டி குறைப்பு இப்போதைக்கு இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் கைவிரிப்பு
மும்பை: வட்டி விகிதத்தை குறைக்கும் விஷயத்தில் அவசரப்படப் போவதில்லை என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கான 2 முதல் 6 சதவீதம் என்ற அளவுக்குள் நீடிக்கிறது. ஆனால், 4 சதவீதமாக அதை நிலைத்திருக்கச் செய்வதே நோக்கம். ரிசர்வ் வங்கியின் கடந்த நான்கு, ஐந்து நிதிக் கொள்கை கூட்டங்களில் இது வலியுறுத்தப்பட்டது. பணவீக்கம் இலக்குக்குள் ஓரிரு முறை வந்தாலும், அது நீடிக்கும் வரை, வங்கிகளின் ரெப்போ கடன் வட்டியைக் குறைக்க அவசரப்படப் போவதில்லை. இந்திய பொருளாதார வளர்ச்சி 7.50 சதவீதத்தை எட்டுவதற்கான அனைத்து சாதகமான அம்சங்களும் உள்ளன. எனினும், 7 சதவீத வளர்ச்சி நிச்சயம் எனக் கூற முடியும். தேர்தலுக்கான செலவு மற்றும் கட்டுப்பாடுகளால், கடந்த காலாண்டில் வளர்ச்சி 6.70 சதவீதமாக தற்காலிக வீழ்ச்சியைக் கண்டது. இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் நீடிப்பதால், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடன் வட்டியை குறைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கி, கடன் வட்டியை 0.25 சதவீதம் குறைத்துள்ள நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ், வருகிற 17, 18ம் தேதிகளில் 0.25 முதல் 0.50 சதவீதம் வரை கடன் வட்டி குறைப்பை அறிவிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள், அமெரிக்க பெடரல் ரிசர்வ், 1 சதவீதம் வரை கடன் வட்டியை குறைத்து விடும் என்றும் நிதிச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் வட்டி குறைப்பு இப்போதைக்கு இல்லை என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளது, முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஒன்பதாவது முறையாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளாமல், 6.50 சதவீதத்தையே தொடர்ந்து வருகிறது.
காலகட்டம் வட்டி விகிதம்2022 ஏப்ரல் 4.00மே 4.40ஜூன் 4.90ஆகஸ்ட் 5.40டிசம்பர் 6.252023ஜனவரி 6.25பிப்ரவரி முதல் 6.50