உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ. 2,000க்கு குறைவான டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி.,

ரூ. 2,000க்கு குறைவான டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி.,

புதுடில்லி:வணிகர்கள் 2,000 ரூபாய்க்கும் குறைவாக மேற்கொண்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வசூலித்த கட்டணங்கள் தொடர்பாக, ஜி.எஸ்.டி., செலுத்தக் கோரி, கட்டண சேவை வழங்கும் சில பேமென்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பில்டெஸ்க், சி.சி., அவென்யூ' உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு, இதுதொடர்பாக கடந்த 2017 - 18ம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி., செலுத்துமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெபிட், கிரெடிட் மற்றும் இணைய வங்கி சேவை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக மட்டுமே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. யு.பி.ஐ., மற்றும் 'ரூபே' கார்டுகள் வாயிலாக செலுத்தப்பட்ட கட்டணங்களுக்கு இதில் விலக்களிக்கப்பட்டுள்ளது.ஆனால், கடந்த 2016ம் ஆண்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2,000 ரூபாய்க்கு குறைவாக வணிகர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்ததால், கட்டணம் வசூலிக்கவில்லை என நிறுவனங்களின் தரப்பில் கூறப்படுகிறது.இதுதொடர்பாக, கட்டண சேவை வழங்கும் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:இந்தியாவில் மேற்கொள்ளப்படும் 80 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2,000 ரூபாய்க்கும் குறைவான தொகையை கொண்டதாகவே உள்ளன. தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என்றால், இந்த பரிவர்த்தனைகளை மேற்கொண்ட சிறு வணிகர்களிடமிருந்தே இந்த தொகையை வசூலிக்க வேண்டும். இது அவர்களுக்கு பெரிய பாரமாக அமைந்து விடும். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் இது சிதைத்து விடும். இந்த விஷயத்தில் மத்திய நிதி அமைச்சரும், ஜி.எஸ்.டி., கவுன்சிலும் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

வங்கிகளாக கருத முடியாது

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக 2,000 ரூபாய் வரை மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு, கட்டண சேவை நிறுவனங்களிடமிருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜி.எஸ்.டி., கட்டண நிர்ணயிப்பு குழு தெரிவித்த ஆலோசனையில், கட்டண சேவை வழங்கும் நிறுவனங்கள் பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் இடைத்தரகர்களாக மட்டுமே செயல்படுவதால், அவற்றை வங்கிகளாக கருதக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 2,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கட்டண வேவை நிறுவனங்களிடமிருந்து ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ